காவல் நிலைய மரணம் கோப்பு படம்
தமிழ்நாடு

மதுரையில் மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மதுரையில் காவலர்கள் தாக்கி தன்னுடைய கணவர் உயிரிழந்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Rishan Vengai

பரமசிவம் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிந்தாமணி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா இருந்ததா, செயல்பாட்டில் இருந்ததா என்பதை ஆணையர் மற்றும் வழக்கறிஞர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி முருகன் கூறியுள்ளார். இதேசமயம், சபரிவர்மன் லாக்அப் மரண வழக்கில் 19 காயங்கள் பதிவாகி, மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் காவலர்கள் தாக்கியதில் கணவர் உயிரிழந்ததாக மனைவி அளித்த புகார் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பரமசிவம், கடந்த மாதம் 19ஆம் தேதி சிந்தாமணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரை போலீஸார் தாக்கியதாகவும், அதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததாகவும் பரமசிவத்தின் மனைவி அய்யம்மாள் குற்றம்சாட்டியுள்ளார்.

Lock Up deaths

இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மதுரை, சிவகங்கை, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மூன்று மூத்த மருத்துவர்கள் குழு மூலம் உடற்கூராய்வு நடத்தவும், அதை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் நீதிபதி முருகன் உத்தரவிட்டார். மேலும், சிந்தாமணி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தனவா என்பதை வழக்கறிஞர், ஆணையர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.