தவெக ஆட்சியிலும் லாக்கப் மரணம்..? சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம்! காவலர்கள் 3 பேர் கைது!
கன்னியாகுமரி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த 35 வயது சபரிவர்மன் மர்மமாக உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனையில் உடலில் 19 இடங்களில் காயங்கள், கை முறிவு, கட்டிப்போட்டு தாக்கிய அடையாளங்கள் வெளிப்பட்டதால், 3 சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை 9ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறி, 35 வயதான சபரிவர்மன் என்பவரை தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 200 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரிவர்மன், நீதிமன்ற உத்தரவின்படி நாகர்கோவில் கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் சிறையில் இருந்த சபரிவர்மன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
பின்னர் தகவலறிந்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய முயன்றனர். தொடர்ந்து நாகர்கோவில் குற்றவியல் நீதிபதி சத்யநாராயணன் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட நிலையில், சபரிவர்மனை காவல்துறைனர் அடித்து கொலை செய்ததாக அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் கொலைக்கு காரணமான காவலர்களை கைது செய்யும்வரை அவரின் உடலை வாங்க மாட்டோம் என அவரின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தவெக அரசை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சமூகவலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், தவெக ஆட்சியிலும் லாக்-அப் மரணங்கள் தொடர்கிறதா என்றும், விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணத்தின் உண்மைக் காரணம் என்னவென்பதை எவ்வித சமரசமுமின்றி கண்டறியவேண்டுமெனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த காவல் மரணங்களுக்கு எதிராகப் பேசிய இன்றைய முதல்வர் விஜய், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை செய்திருக்கும் இந்தப் படுகொலைக்கு என்ன செய்யப் போகிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
3 காவலர்கள் கைது..
மாவட்ட நீதிபதி முன்னிலையில் நடந்த பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவலில், நாகர்கோவில் சிறையில் உயிரிழந்ததாக கூறப்படும் சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்கள், நெஞ்சு பகுதிகளில் காயம் மற்றும் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல கை, கால்களை கட்டிப் போட்டு தாக்கியதற்கான அடையாளம் உள்ளது. மேலும் தலை, பின் கழுத்திலும் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்று தனது கணவர் அடித்துக் கொலை என சபரிவர்மன் மனைவி புகார் அளித்திருந்த நிலையில், சபரிவர்மன் மரணமடைந்த விவகாரத்தில் சிறை வார்டன் உட்பட சிறைக் காவலர்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

