பல்லடம் அருகே வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்வதுபோல் வந்த குறுஞ்செய்தியை நம்பி க்ளிக் செய்ததால் நிதி நிறுவன உரிமையாளரிடம் ஏழரை லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அருள்புரத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வீரபாண்டி பிரிவில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் 13 வருடங்களாக வங்கி கணக்கு வைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் எட்டாம் தேதி ஒரு செல்போன் எண்ணில் இருந்து வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவையுடன் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அந்த குறுஞ்செய்தியில் உங்களது வங்கி கணக்கு KYC அப்டேட் செய்ய வேண்டும் எனவும் இன்று கடைசி நாள் எனவும் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்துதான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ் whatsapp-ல் வந்த லிங்கை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர் பிறந்த தேதி பதிவு செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ஆறு பரிவர்த்தனைகளில் சுமார் 7,47,800 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு தனது வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் உடனடியாக வங்கி கணக்கை பிளாக் செய்யுமாறு கேட்டுள்ளார். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து தான் வங்கி தரப்பில் இது குறித்து நடவடிக்கை எடுத்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தங்கராஜ் திருப்பூர் மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.