செங்கோட்டையன் ஆதரவாளர்கள் முன்னாள் எம்.பி. உள்பட 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், முன்னாள் எம்.பி. சத்யபாமா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கட்சியின் கொள்கை, நோக்கம் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளைப் புறந்தள்ளி செயல்பட்டு வந்த அதிமுகவில் முன்னாள் எம்.பி. சத்யபாமா உள்பட 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி, அதிமுக முன்னாள் எம்,பி. சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன், கோபி மேற்கு ஒன்றியச் செயலாளர் குறிஞ்சிநாதன், முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மௌதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேரும் அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கட்சியினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் அம்மா 3 முறை முதலலைச்சராக்கினார். கொல்லைப்புறமாக முதல்வரானவர் பழனிசாமி. எங்களைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், கே.பழனிசாமி முதல்வர் ஆகியிருக்க முடியாது. தன்னை முதல்வர் ஆக்கிய சசிகலாவை, மிக அவதூறாகப் பேசினார் பழனிசாமி. கடந்தகாலத்தை நான் சொல்ல விரும்பவில்லை. அதைச் சொல்வதும் சரியாக இருக்காது. ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன் கால்களில் நடந்துசெல்ல வேண்டும்.
பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது. அப்படி, பிறர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டும் என கனவு கண்டால், இந்த நிலைதான் ஏற்படும். திமுகவைப் பொறுத்தவரை நான் பி டீம் என்றார். அதைச் சொல்வதற்கே தகுதியில்லை.
நான் யாரையுமே விமர்சனம் செய்வதில்லை. இந்த இயக்கத்திற்காக தியாகம் செய்தவர்கள், இந்த இயக்கமே உயிர் என்று நேசித்தவர்கள், சாதாரண இந்த இயக்கத்தைப் பற்றித் தெரியாதவர்களிடத்தில் சென்று மண்டியிட வேண்டிய காலம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரிந்தவர்கள் ஒன்று கூடுவது இல்லையா? ஒரு வீட்டில் அடிதடி சண்டை நடந்து, பின்பு அவர்கள் ஒன்று சேருவது இல்லையா” எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக சத்யபாமா, “அம்மா ஒரு பெண்ணாக பல கஷ்டங்களைச் சந்தித்தவர். அவர்தான் எனக்கு ரோல்மாடல். உழைத்தவர்களுக்குப் பதவி வழங்கியவர் அம்மா. கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று பேசியதற்காக நீக்கிவிட்டார்கள். நாங்கள் இன்றுவரை அமைதியாகத்தான் போகிறோம். என்ன தவறு செய்தோம்? பங்காளிச் சண்டைகள் எல்லாம் இருக்கிறது. அதையெல்லாம் மறந்து நல்லது நடக்கும்போது, ஒன்றிணைய வேண்டும். நாங்கள் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதாக குரல் கொடுத்துள்ளோம்.
அதற்காக எங்களை நீக்கியிருக்கிறார்கள். அது எந்த விதத்தில் நியாயம்? ஒரு கட்சி ஆட்சியில் இருந்தால்தானே மரியாதை. நாம் ஆளுங்கட்சியாக இருந்தால்தான், நமக்குப் பெருமை. நான் சாதாரண தொண்டராகவே இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு எதுவும் வேண்டியதில்லை. நம் அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் எனில், ஒருசிலவற்றை விட்டுக் கொடுத்துத்தான் போக வேண்டும்”என்றார்.