அமைச்சர் சேகர்பாபு pt desk
தமிழ்நாடு

தைப்பூசத் திருவிழா | அன்னதானம் தொடர்பாக ஹெச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு சேகர்பாபு கொடுத்த பதில்

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கட்டணம் தரிசனம் ரத்து செய்யப்படுவதோடு, மூன்று நாட்களுக்கு பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: தி.கார்வேந்தபிரபு

பழனியில் தைப்பூசத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்:

பழனியில் தைப்பூசத் திருவிழா அடுத்த மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தருகிறார்கள். அவ்வாறு பழனிக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

அமைச்சர் சேகர்பாபு

மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்து வசதி:

இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பழனிக்கு பக்தர்கள் நடந்து வரும் சாலையை சரி செய்து வைக்க வேண்டும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கும் தைப்பூசத் திருவிழா:

இதைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் அறிவுறுத்தினர். தைப்பூச திருவிழா வருகிற 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழாவை பக்தர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடத்திக் கொடுத்த ஒத்துழைப்பு வழங்க அனைத்து துறை அதிகாரிகளையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பழனி முருகன் கோவில்

மூன்று நாட்களுக்கு மலைக் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து:

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,

பழனி முருகன் கோயிலில் தைப்பூச நாள் மற்றும் அடுத்த இரண்டு நாள் என மூன்று நாட்களுக்கு மலைக் கோயிலில் கட்டண தரிசனத்தை ரத்து செய்து, பக்தர்கள் கட்டணமில்லாமல் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தைப்பூசத் திருவிழாவின் போது பழனிக்கு வரும் பக்தர்களுக்கு நகரப் பகுதியில் இலவசமாக பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும், பழனி தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அறநிலையத் துறை சார்பில் நாள்தோறும் இருபதாயிரம் பக்தர்களுக்கு வீதம் இரண்டு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

எச்.ராஜா அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்குவேன் என தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...

”இலவசமாக பக்தர்களுக்கு அன்னதானம் தருவதை வரவேற்கின்றோம். அதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. அதே நேரத்தில் அந்த உணவினால் பக்தர்களுக்கு எந்த ஒரு உபாதையும் வந்து விடக்கூடாது என்பதில் இந்த ஆட்சி உறுதியாக இருக்கின்றது. ஏதாவது கிடைக்காதா என்று எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்கள் தெரிவித்துக் கொண்டே தான் இருப்பார்கள்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.