திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் அடிவாரம் பகுதியில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள 'அருள்மிகு தண்டாபாணி சுவாமி மடம்' என்ற பெயரிலேயே வருவாய்த்துறை ஆவணங்களிலும், பட்டாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடிஆகும். இந்த இடம் பழனிக்கு வரும் பக்தர்களுக்காகக் கட்டணமில்லா வாகன நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மடத்தின் சொத்து தொடர்பாக ஏற்கனவே பல சட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன.
1999ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி இந்த மடத்திற்குத்தக்கார் நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம் 15.03.2002 தேதியிட்ட Writ Petition No.13196 of 1999 மற்றும் அதன் மேல்முறையீட்டு மனுவிலும் கோயிலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்றமும், பழனி அசல் நீதிமன்றமும் இந்தத் தக்காருக்கான நியமனத்தை உறுதி செய்து தீர்ப்பளித்தன. இதற்கிடையில், இந்தச் சொத்தை சிலர் அபகரிக்க முயல்வதை அறிந்த மடத்தின் தக்கார், "இந்தச் சொத்து தொடர்பாக எவ்விதப் பத்திரப்பதிவும் மேற்கொள்ளக் கூடாது" என்று 15.10.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் பழனி இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தெளிவான தடை அறிவிப்புக் கடிதங்களை அனுப்பியிருந்தார். மேலும், 25.12.2025 மற்றும் 02.07.2026 ஆகிய தேதிகளிலும் நீதிமன்ற உத்தரவுகளைச் சுட்டிக்காட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால், இந்த நீதிமன்ற உத்தரவுகளையும், தக்கார் கொடுத்த கடிதங்களையும் முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, ஒரு பெரும் நில மோசடி அரங்கேறியது. 30.06.2026 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்தத் திட்டத்தைப் பற்றித் தகவல் தெரிவிக்காமல், ஒருதலைப்பட்சமாகத் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். கடந்த 06.07.2026 அன்று, பழனி பதிவு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார்பதிவாளராகப் பணிபுரிந்து வந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, கூட்டுச்சதியில் ஈடுபட்டார். இந்தத் திருமட நிலங்களுக்கு எந்த வகையிலும் பாத்தியமில்லாத திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ சுவாமிகள், அண்ட தண்டபாணி சுவாமிகள் டிரஸ்ட் ஆகியவற்றின் நிர்வாகி என்று கூறிக்கொண்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர் மூலம், உடுமலை பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை மற்றும் பழனி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகிய இருவருக்கும் கிரையப் பத்திரம் பதிவு செய்து கொடுத்து, ₹100 கோடி சொத்தை மோசடியாக மாற்றியுள்ளார்.
இந்த மோசடி குறித்து அறிந்த இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் =என்பவர் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் 13-07-2026 அன்று புகார் அளித்தார். அன்றே பழனி அடிவாரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் R.முரளி என்பவர் BNS சட்டப் பிரிவுகள் 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் துறை இயக்குநர் ஆகியோர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இதற்கான ஆணை பிறப்பித்தார்.
இந்த உத்தரவுகளின்படி, திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் வே. சந்தானலெட்சுமி, பழனி அடிவாரம் காவல் நிலையத்திலிருந்து வழக் கோப்பைப் பெற்றுக்கொண்டார். கோப்புகளை ஆய்வு செய்த பின், சிபிசிஐடி பிரிவில் குற்ற எண். 02/2026-ன் கீழ் BNS பிரிவுகள் 336(3), 340(2), 318(4), 49, 61(2) ஆகியவற்றின் கீழ் முறைப்படி சிபிசிஐடி போலீசார் புதிய வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக (I.O.) சிபிசிஐடி உதவி காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் நியமிக்கப்பட்டு, அவரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் நகல்கள் உரிய நீதிமன்ற நடுவர் நீதிமன்றத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டு, புலன் விசாரணை தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.