இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு முதற்கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், 2வது கட்டமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வாக்களர்களின் வீடுகளுக்கே சென்று எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டன. தொடர்ந்து, டிசம்பர் 4 ஆம் தேதி எஸ்.ஐ.ஆர் பணிகளின் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 14 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் கால அவகாசம் கொடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று, தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்தத்தின் பிறகு, இன்று வாக்காளர் வரைவுப்பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழகத்தில் 97.35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், "சிவகங்கை மாவட்டத்தில் 1,50,828 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக அறிகிறேன். காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டியுள்ளேன்
இத போன்று எல்லா அரசியல் கட்சிகளும் செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.