புதுச்சேரியில் சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து பொது ஏலத்தில் விடுவதற்கு புதுச்சேரி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கால்நடைகளுக்கான உரிமம் பெற்று பாதுகாப்பான இடங்களில் வளர்க்காத உரிமையாளர்களிடம் இருந்து கால்நடைகள் சட்டப்படி பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்தை குறைக்கும் வகையில் அவற்றை அகற்றி தங்குமிடங்கள் அல்லது கோசாலைகள் கால்நடை பட்டியலில் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்தசூழலில் புதுச்சேரி மாநிலத்தில் கால்நடைகளால் ஏற்படும் விபத்து அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி முக்கிய ஆணையை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் வெளியிட்டிருக்கும் உத்தரவின் படி, சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அடைப்பதற்கும் அபராதம் விரிப்பதற்கும் நகராட்சி ஆணையர் அல்லது ஆணையரால் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சட்டப்பூர்வமான அதிகாரம் உள்ளது. முதல் கட்டமாக நெடுஞ்சாலைகளில் மாடுகள் காணப்படும் இடங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் ரோந்து மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பொதுப்பணித்துறையுடன் இணைந்து சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு திருப்பி தராமல் கோசாலைகள், கால்நடை பட்டிலில் அடைத்து பின்னர் பொது ஏலம் விடுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை தங்களுக்கு சொந்தமான இடங்களிலேயே நகராட்சியிடம் முறையான உரிமம் பெற்று பாதுகாப்பான முறையில் வளர்க்கவேண்டும் என புதுச்சேரி நகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் கண்டிப்பான முறையில் கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் அல்லது தெருக்களில் மாடுகள் நாய்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிப்பதற்கான whatsapp எண் புதுச்சேரி நகராட்சியால் கொடுக்கப்பட்டுள்ளது.