செய்தியாளர் சந்தானக்குமார்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்நிலையில், 2026 தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதால், ஓ. பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படியான சூழலில், சென்னை வேப்பேரியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு, சட்டமன்றத் தேர்தல் பணிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மதுரையில் செப்டம்பர் 4ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநாடு நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே, அதிமுகவினர் அனைவரும் இணைய வேண்டுமென்பதே தங்களது விருப்பம் எனக் கூறிய ஓபிஎஸ், அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் இணைந்துகொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மதுரை மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளது, 2026 தேர்தலையொட்டி அதிமுகவை பலப்படுத்தும் திட்டமா எனும் கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.