Thanga Tamilselvan & O Paneerselvam  screen Shot
தமிழ்நாடு

செல்வமும்... செல்வனும்.. ஒரே அணி | திமுக வசம் சென்ற அதிமுகவின் கோட்டை.. சாதகமா? பாதகமா?

அதிமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த தேனி இன்று ஒரு வரலாற்றுத் திருப்பத்தைச் சந்தித்து, முழுமையாகத் திமுகவின் வசமாகியுள்ளது.

PT WEB

அதிமுகவின் இரும்புக்கோட்டையாக இருந்த தேனி மாவட்டம், திமுகவின் முழுமையான ஆதிக்கத்திற்குள் சென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் திமுகவில் இணைந்ததால், அதிமுகவின் முக்கியத்துவம் குறைந்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா என்பது தமிழக அரசியலில் முக்கிய கேள்வியாக உள்ளது.

செய்தியாளர் - ரமேஷ் கண்ணன்

அதிமுகவின் இரும்புக்கோட்டை தேனி

தமிழக அரசியலில் 'நட்சத்திர அந்தஸ்து' கொண்ட மாவட்டம் என்றால் அது தேனி மாவட்டம் தான். எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா வரை... மூன்று முதலமைச்சர்களை அரியணையில் அமரவைத்த இந்த தேனி மண்ணில், இப்போது ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறியிருக்கிறது! அதிமுகவின் அசைக்க முடியாத இரும்புக்கோட்டையாகத் திகழ்ந்த இந்த மாவட்டம், இன்று ஒரு வரலாற்றுத் திருப்பத்தைச் சந்தித்து, முழுமையாகத் திமுகவின் வசமாகியுள்ளது.

1984-ல் எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோதே அவரைத் தேர்ந்தெடுத்து முதலமைச்சராக்கியதும், 1989-ல் அதிமுக பிளவுபட்டிருந்த நேரத்தில் ஜெயலலிதா போடி தொகுதியில் வென்று தனது அரசியல் ஏறுமுகத்தைத் தொடங்கியதும் இதே மண்ணில்தான். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் 2001, 2014 மற்றும் 2016 என மூன்று முறை தமிழக முதலமைச்சராகப் பொறுப்பும் வகித்திருக்கிறார்

Thanga Tamil Selvan

ஓ.பன்னீர் செல்வத்திற்கு அடுத்து, தேனியின் முக்கியத்துவத்திற்கு இரண்டாவது காரணம் தற்போதைய திமுகவின் தேனி மக்களவை உறுப்பினரான "தங்க தமிழ்ச்செல்வன்”.

ஜெயலலிதாவின் இடது மற்றும் வலது கரங்கள் 

ஜெயலலிதாவின் "இடது மற்றும் வலது கரங்களாக" வலம் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையிலான மோதல்கள் தேனி மாவட்ட அரசியலின் அனல் பறக்கும் அத்தியாயங்கள். ஜெயலலிதாவுக்காகத் தனது எம்எல்ஏ பதவியையே தியாகம் செய்தவர் தங்க தமிழ்ச்செல்வன் என்றால், ஜெயலலிதாவின் அரியணையை நம்பிக்கையோடு காத்துத் தந்தவர் ஓபிஎஸ்.

O Paneerselvam with Ms Jayalalaitha

அதிமுகவில் இருந்தபோதே இருவருக்கும் இடையே பனிப்போர் இருந்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தால், முதலமைச்சர் வரை உச்சம் பெற்ற போதிலும், அமைச்சராகக் கூட உயர முடியவில்லை என்ற ஆதங்கம் தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.

2009 மக்களவைத் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன் தோற்றதற்கு ஓபிஎஸ்-ன் உள்ளடி வேலைகளே காரணம் என்ற குற்றச்சாட்டு இவர்களிடையே பகையை வளர்த்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் காட்சிகள் மாறின. 2019 மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக சார்பில் நின்ற தங்க தமிழ்ச்செல்வன் தோல்வியுற்றார். பின்னர் திமுகவில் இணைந்த அவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் ஓபிஎஸ்-க்கு எதிராக நேரடியாகக் களம் கண்டு அரசியல் களத்தில் அனல் பறக்க வைத்தார். பல வழிகளில் இவர்களுக்குள் மோதல் நீடித்தது.

OPS's son Ravindranath

இருப்பினும் தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, 2024 மக்களவைத் தேர்தலில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பியாக வெற்றி பெற்று தனது அரசியல் வலிமையை நிரூபித்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 27, 2026 அன்று போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது ஒரு சகாப்தத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவிற்கு 3 முதல்வர்களைத் தந்த மாவட்டத்தில், இன்று ஒரு மக்கள் பிரதிநிதி கூட இல்லாத "வாஷ்-அவுட்" நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித் தேர்தலில் 6 நகராட்சிகளும், 21 பேரூராட்சிகளும் திமுக வசமான நிலையில், இப்போது மாவட்டத்தின் முழு அதிகாரமும் திமுகவின் கைக்கு வந்துள்ளது.

செல்வமும் செல்வனும்

OPS with Thanga Tamilselvan

அதேவேளையில், அதிமுகவில் இருந்தபோதே இருவேறு துருவங்களாக இயங்கிய "செல்வமும் செல்வனும்", இப்போது ஒரே பேரியக்கத்திற்குள் சங்கமித்திருப்பது "உயிரினும் மேலான உடன்பிறப்புகள்" மத்தியில் புருவத்தை உயரச் செய்திருக்கிறது. முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்-க்கு திமுகவில் அதீத மதிப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவார்களா என்பதை உற்று நோக்கி காத்திருக்கிறது தமிழக அரசியல் களம்! அதிமுகவில் இருந்த போதே இருவருக்குள்ளும் இருந்த "பனிப்போர்", தற்போதும் தொடருமா? என்ற கேள்வி பிரதானமாக எழுந்திருக்கிறது.