சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு, அஜித்குமார் என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் திடீரென உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால்தான் அந்த இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்படும் நிலையில், இதுதொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, " ‘ஜெய்பீம படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? @mkstalin விக்னேஷ் லாக்கப் மரணத்தின்போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவரதானே நீங்கள்? இதற்கும் அதேபோல் பொய்தான் பதிலாக வருமா? தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது. தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம். திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுசெயலாளர் ஆனந்த், ”கபட நாடகத் திமுக ஆட்சியில், காவல் துறையின் கட்டுப்பாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் உயிரிழப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல சம்பவங்கள், இதற்கு உதாரணமாக உள்ளன. மேலும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு, கனகம்மாசத்திரம் கர்ப்பிணிப் பெண்ணைக் காவலர் காலால் உதைத்த சம்பவம், த.வெ.க. தலைவர் அவர்களின் உருவம் பதித்த கைக்குட்டையை வைத்திருந்த கல்லூரி மாணவர் மீது விசாரணை என இந்த ஆட்சியில் காவல் துறையின் அராஜகப் போக்கைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டுப் புகார் அளிக்க வருவோர் மீதே காவல் துறை வழக்குப் பதிவு செய்த வரலாறும் இந்த அவல ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது.
காவல் துறையின் போக்கைக் கவனித்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது காவல் துறையின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு மாதிரியும், ஆளும் கட்சியாக மாறிய பின் ஒரு மாதிரியும் பேசுவது என்பது, தற்போதைய ஆட்சியாளர்களுக்குக் கைவந்த கலை. விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர் காவல் துறையால் உரிய சட்ட விதிமுறைகளின்படிதான் விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அராஜகத்தில் ஈடுபடக் கூடாது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் உயிரிழந்த விவகாரத்தில், தவறிழைத்த காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. முறையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழாதவண்ணம், காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “இந்தக் கொலையை மூடிமறைக்கும் வேலையில், காவல்துறையினரும், அந்தப் பகுதி திமுகவினரும் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.பாலியல் குற்றங்களில் ஈடுபடும் திமுகவினர், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் திமுகவினர் யாரும், காவல்துறை விசாரணையின்போது தாக்கப்படுவதில்லை. ராஜமரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். சிறுசிறு குற்றங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் அப்பாவிகளைக் காவல்துறை விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்குவது, திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, 23 பேர் காவல்துறை விசாரணையின்போது மரணமடைந்துள்ளனர்.
ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர், இதுகுறித்து எந்தக் கவலையுமின்றி இருக்கிறார். தமிழகத்தில், ஆளுங்கட்சியினர், அமைச்சர்களின் நண்பர்கள் குற்றம் செய்தால், அவர்களைக் காப்பாற்ற, பாதிக்கப்பட்டவர்களையே மிரட்டும் திமுக அரசு, ஏழை எளிய மக்கள் என்றால், அவர்கள் உயிர் போனாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உடனடியாக, திருப்புவனம் இளைஞர் அஜித், காவல்துறை விசாரணையில் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும். இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என அவர் வலியுறுத்தியுள்ளார்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மனித உரிமைகளை சிறிதும் மதிக்காமல் ஸ்டாலின் காவல்துறை இளைஞரை அடித்தே கொலை செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும்? என்பதற்கான விதிகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நிலையில், அவற்றை மதிக்காத காவல்துறையினர் அஜித்குமாரை கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். இதற்காக தமிழக காவல்துறையும், அதற்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரும் தலைகுனிய வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் படுதோல்வி அடைந்து விட்ட காவல்துறை அப்பாவிகளை விசாரணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளில் 28 பேர் காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ம்ர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல்கள் இருக்க முடியாது” என தனது வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.