கோவை புதிய தலைமுறை
தமிழ்நாடு

கோவை | வாட்ஸ் குழுவில் வந்த வர்த்தக பழக்கம்; ஆன்லைன் பணமோசடியில் லட்சங்களை இழந்த நபர்.. 3 பேர் கைது!

கோவையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: சுதீஷ்

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த மெஹுல் பி.மேத்தா என்பவர் ஆன்லைன் மோசடியில் 11,89,000 ரூபாயை இழந்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மெஹுல் பி.மேத்தா அளித்த புகாரில், “கடந்த டிசம்பர் மாதத்தில் குர்மீட் சிங் (Gurmeet Singh) என்ற நபர் என்னை VIP1 stock market exchange strategy என்ற வாட்ஸ் அப் குழுவில் இணைத்தார். அந்தக் குழுவில் பங்கு சந்தை வர்த்தகம் பற்றி குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்தது, என்னிடம் Joyti sharma என்ற நபர் அறிமுகமாகி பங்கு சந்தை சம்பந்தமாக அதிக லாபம் சம்பாதிக்க அறிவுரை வழங்குவதாக கூறினார். அந்த நபர் கூறியதை நம்பி Acadian PRO என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் எனக்கான கணக்கை துவங்கினேன். பின்னர் அந்த செயலில் நடக்கும் வர்த்தகத்தில் நம்பத் தகுந்த லாபம் கிடைப்பதாக அவர்கள் நம்ப வைத்தனர்.

கோவை

அதை நம்பி பல்வேறு பரிவர்த்தனைகளில் ரூபாய் 11,89,000/- முதலீடு செய்து பங்குகளை வாங்கி விற்றேன். அதற்குண்டான லாபமாக அந்த செயலியில் உள்ள எனது கணக்கில் ரூபாய் 15,00,000/- காண்பிக்கப்பட்டது. அதை எனது வங்கி withdraw செய்ய கேட்டபோது என்னை மீண்டும் பணம் செலுத்தி வர்த்தகம் செய்ய வற்புறுத்தினர். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டு சைபர் கிரைம் ஆன்லைன் வாயிலாக புகார் தெரிவித்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து காவல் நிலையம் வந்து கொடுத்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழக்கில் கோகுலகிருஷ்ணன், மணிகண்டன், பிரபாகரன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து வழக்கின் தொடர்புடைய சொத்துக்கள் வங்கி புத்தகங்கள் காசோலை புத்தகங்கள் செல்போன்கள் லேப்டாப் சிம்கார்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.