உயிரிழந்த ஐயப்பன் pt web
தமிழ்நாடு

நெல்லை | முற்றிய ரேபிஸ் நோய்.. அலட்சியத்தால் பறிபோன மற்றொரு உயிர்! நாய்க்கடிச்சா இதை உடனே செய்யுங்க!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (31) என்பவர் நாய் கடித்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

PT WEB

திருநெல்வேலியில் கூலி தொழிலாளி ஒருவர் நாய் கடியால் ரேபிஸ் பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றிஉயிரிழந்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் வயது 30. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவர் வேலைக்கு சென்ற இடத்தில் ஐயப்பனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இந்த நிலையில், அவர் அதை சரியாக கவனிக்காமல், அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

file image

இந்த சூழ்நிலையில், அந்த வாலிபருக்கு உடல்நிலை மோசம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், சிகிச்சை பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரேபிஸ் பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு அவரை பரிசோதனை செய்த 2 டாக்டர்களையும் அந்த வாலிபர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் இன்று ரேபிஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து ஐயப்பன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். ரேபிஸ் தொற்று ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வெறி நாய்

நாய்க்கடியால் பாதிப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் !

நாய்க்கடி மற்றும் நாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே செய்ய வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

நாய் கடித்தவுடன் சிறிதும் தாமதிக்காமல்,

  • கடித்த பகுதியை சோப்பு மற்றும் சுத்தமான ஓடும் நீரில் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக கழுவ வேண்டும். இது கிருமிகள் பரவுவதைத் தடுக்கும்.

  • ஆல்கஹால் அல்லது வீட்டில் இருக்கும் கிருமிநாசினியைப் பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை நன்றாக துடைக்க வேண்டியதும் அவசியம்.

இவை எல்லாம் வெறும் முதலுதவி மட்டும்தான்.

  • காயத்தை சுத்தம் செய்த கையோடு அருகில் இருக்கும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

  • காயம் ஆறிவிட்டது, வலி இல்லை என்பதற்காக எல்லாம் சரியாகிவிட்டது என்று அலட்சியம் காட்டக்கூடாது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும்.

  • எக்காரணம் கொண்டும் நாய் கடித்த காயம் மீது எண்ணெய், மை, மிளகாய், சுண்ணாம்பு உள்ளிட்ட எந்தப் பொருளையும் தடவக்கூடாது.

  • நாய்க்கடிக்கு கை மருத்துவமோ, மூடநம்பிக்கை சடங்குகளோ எந்தப் பலனையும் தராது. நாய் கடித்த உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.