குடிபோதையில் தாக்குதல்
குடிபோதையில் தாக்குதல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

குடிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறு.. தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யுவபுருஷ்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் மூன்றாவது வீதியைச்சேர்ந்தவர் ஹக்கீம்(38). இவர் மேட்டுப்பாளையம் அண்ணா மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இதேபோல் மேட்டுப்பாளையம் அன்னாஜி ராவ் ரோடு பகுதியைச்சேர்ந்தவர் ஆனந்தகுமார்(47). இவர் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த இருவரும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே உள்ள பாருக்கு மது குடிக்க தனித்தனியாக சென்றுள்ளனர். அப்போது மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ஆனந்தகுமார் தன்னுடைய மகன் ஜீவானந்தத்தை(22) செல்போனில் பேசி, மது குடிக்கும் பாருக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது ஆனந்தகுமாரும் அவரது மகனும் சேர்ந்து ஹக்கீமை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஹக்கீம் கடந்த 14-ஆம் தேதி இரவு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, உடற்கூராய்வு பரிசோதனையில் ஹக்கீமை எட்டி உதைத்ததால் குடல் கிழிந்து இறந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தாக்குதல் நடத்தி ஹக்கீமை கொலை செய்த ஆனந்தகுமார் மற்றும் அவரது மகன் ஜீவானந்தம் ஆகிய இருவரையும் மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு சம்பந்தமான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..