சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கம்; புதிய தலைமுறைக்கு கிடைத்த பிரத்யேக கடிதம்!

சுமார் 424 கோடி ரூபாய் வருமானவரி செலுத்தவில்லை என கூறி சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இதனால் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியம் கூட வழங்கமுடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்pt web

சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் இல்லாத நிலையில் உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வகித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம் வருமானவரியை முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக 424 கோடியே 67 லட்சத்து 56 ஆயிரத்து 780 ரூபாய் (ரூ. 424,67,56,780) வருமானவரி நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது.

இந்த வரியை வசூலிக்கும் முனைப்பில் பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இருக்கும் 37 கணக்குகளை வருமானவரித்துறை முடக்கியுள்ளது. இந்த கணக்குகளை முடக்கும்படி வருமானவரித்துறை பாரத ஸ்டேட் வங்கிக்கு எழுதிய கடிதத்தின் நகல் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.

அதில், சென்னை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியில் குறிப்பிட்ட தொகையை வருமானவரியாக செலுத்த வேண்டும். கடந்த 2017-2018 நிதி ஆண்டு முதல் 2020- 2021 நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய ரூ.424 கோடி வருமான வரியை சென்னை பல்கலைக்கழகம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வரியை செலுத்த வருமான வரித்துறை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு அவகாசம் வழங்கியும் அதனை செலுத்தாமல் தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.

வருமான வரித்துறை சார்பில் மூன்று முறை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியும் அதற்கு உரிய வகையில் விளக்கத்தை சென்னை பல்கலைக்கழகம் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் மூன்றாவது முறையாக வருமான வரித்துறை சார்பில் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த கடிதத்துக்கும் உரிய வகையில் விளக்கம் அளிக்கப்படாததால்தான் வருமானவரித்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வங்கி கணக்குகள் மூலமாகத்தான் பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் பணியாற்றும் 200 பேராசிரியர்கள் மற்றும் கற்பித்தல் பணியில் இல்லாத 400 பணியாளர்களுக்கு ஊதியமும், 1,400 பேருக்கு ஓய்வூதியமும் இந்த வங்கிக் கணக்குகள் மூலமே வழங்கப்பட்டு வந்தது.

பல்கலைக்கழகத்தின் மின் கட்டணம், வாகன பராமரிப்பு மற்றும் பெட்ரோல் நிரப்புதல் போன்றவைகளுக்கும் வங்கிக் கணக்கு தேவையாக இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தை நடத்த ஒவ்வொரு மாதமும் சுமார் 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. தற்போது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் இந்த பணபரிவர்த்தனைகள் எதையுமே பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் தமிழகத்தின் பழமையான பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கொடுத்துள்ள விளக்கத்தில், “வரி கட்டாததும், காலதாமதம் ஆனதும் உண்மைதான். இதனால் வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனர். வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கடிதம் கொடுத்துள்ளோம். இந்த விவகாரத்தை பொறுத்தவரை மாணவர்களின் நலம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், மாணவர்களின் நலன் நிச்சயமாக காக்கப்படும், யாரும் கவலை அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com