ராபிடோ ஊழியர் பிரதீப் குமார் pt desk
தமிழ்நாடு

சென்னை: இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்து மோதிய சொகுசு கார்... பைக் டாக்ஸி ஊழியர் பலி

மதுரவாயல் பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் (39). Rapido-வில் (பைக் டாக்ஸி) பணிபுரிந்து வந்த இவர், தனது இருசக்கர வாகனத்தில் மதுரவாயல் பைபாஸ் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவரின் பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில், அவர் சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Accident

இந்நிலையில், காரை ஓட்டி வந்த நபர் காரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தப்பிச்சென்ற கார் ஓட்டுநர் முரளி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.