உயிரிழந்தவர் மற்றும அவரின் உறவினர்
உயிரிழந்தவர் மற்றும அவரின் உறவினர் புதிய தலைமுறை
தமிழ்நாடு

கழிவுநீர் தொட்டியால் மற்றொரு மரணம் - “உயிர்போனா திரும்பி வருமாங்க?” - உயிரிழந்தவரின் உறவினர் கேள்வி

PT WEB

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி நேற்று ஒருவர் உயிரிழந்தார்.

அம்பத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது நண்பர்கள் ரமேஷ், ராஜேஷ் ஆகியோருடன் திருமுல்லைவாயில் நடேசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு, வீட்டை தூய்மை செய்யும் பணிக்காக சென்றுள்ளார்.

உயிரை பறிந்த கழிவுநீர் தொட்டி

அப்போது கழிவுநீர் தொட்டியையும் சுத்தம் செய்யுமாறு குடியிருப்புவாசிகள் கூறியுள்ளனர். இந்த பணியில் சுரேஷ் ஈடுபட்டபோது, விஷவாயு தாக்கியதால் மயக்கமடைந்து, கழிவுநீர் தொட்டிக்குள்ளேயே சுருண்டு விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற ரமேஷும் மயக்கம் அடைந்த நிலையில், தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் சுரேஷ் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற சுரேஷின் உறவினர்கள், “வீட்டைத்தான் தூய்மை செய்ய வேண்டும் எனக்கூறியிருந்தனர். ஆனால் இங்கு வந்தபின் கழிவுநீர் தொட்டியில் வேலை பார்க்க வைத்துவிட்டனர்” என குற்றம்சாட்டினர். இதனிடையே அங்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார்.

இதில் சுரேஷின் உறவினர் கலைச்செல்வி என்பவர் நம்மிடையே பேசுகையில், “வீட்டு வேலை இருக்கிறது எனக்கூறி, அதுவும் குறைந்த சம்பளமே கொடுப்பதாக கூறி கூப்பிட்டனர். வேலை என்பதால் வந்தார். மெஷினை வைத்து சுத்தம் செய்யாமல், செப்டிக் டேங்கில் ஆளை இறக்கி கொன்றுவிட்டார்கள்... உயிர்போனா வருமா? சொல்லுங்க... இன்னைக்கு எவ்ளோ மெஷின் வந்துடுச்சு... இப்பவும் இப்படி பண்றாங்க” என்ற அழுத்தமான கேள்வியை முன்வைத்தார்.