சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

பொள்ளாச்சி விவகாரம்: “முதலமைச்சர் சொல்வது அத்தனையும் உண்மை” சபாநாயகர் அப்பாவு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஆதாரங்களை ஆய்வு செய்ததில் பேரவையில் முதலமைச்சர் கூறிய அனைத்தும் உண்மை என தெரியவந்திருப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் நீண்ட விவாதம் நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு

அதன் தொடர்ச்சியாக இன்று அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை இருதரப்பும் சபாநாயகரிடம் சமர்பித்த நிலையில் அதற்குரிய தீர்ப்பை இன்று அவர் வழங்கியுள்ளார். அதில் இரு தரப்பு ஆதாரங்களையும் ஆய்வு செய்ததில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பேரவையில் முதலமைச்சர் கூறிய அனைத்தும் உண்மை என தெரியவந்திருப்பதாக கூறினார்.

சம்பவம் 12 ஆம் தேதி நடைபெற்றிருப்பதும், வழக்கு 19 ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு சென்றதாகவும் 24 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாகவும் அப்பாவு தெரிவித்தார். அதே நேரத்தில் 24 ஆம் தேதி புகார் பெறப்பட்டு 24 ஆம் தேதியே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்திருப்பதையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சபாநாயகரின் இந்த தீர்ப்புக்கு அதிமுக எம் எல் ஏக்கள் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் இன்று காலை எனது அறைக்கு வந்த இரு தரப்பும் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டதால் இதோடு முடித்துக் கொள்கிறேன் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.