தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் மரணம் web
தமிழ்நாடு

தூத்துக்குடி| 4 மகன்கள், 2 மகள்கள்.. கை, கால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட மூதாட்டி!

தூத்துக்குடியில் மூதாட்டி ஒருவர் ஒரு வாரமாக காணாமல் போனதாக சொல்லப்பட்ட நிலையில், கை, கால் கட்டப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

தூத்துக்குடி மாவட்டத்தில் 70 வயது மூதாட்டி பேச்சியம்மாள் காணாமல் போன நிலையில், அவரது உடல் கிணற்றில் கை, கால் கட்டப்பட்டு, கல்லுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது. கிராம மக்கள் தகவலின் பேரில் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மிட்டா வடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசிங்கம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள்(70). இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என அனைவருக்கும் திருமணமாகிய நிலையில், அதே கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டு விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 3-ம் தேதி முதல் காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் காணாமல் போன மூதாட்டி பேச்சியம்மாளை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தேடிவந்த நிலையில், இன்று அக்கிராமத்தின் காட்டுப்பகுதியில் உள்ள ஊரணியில் இருந்த கிணற்றில் 70 வயது முதாட்டியான பேச்சியம்மாள், அவரது கை மற்றும் கால்களில் துணிகளால் கட்டப்பட்டும், உடலில் கல்லை கட்டப்பட்டவாறும் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் காடல்குடி காவல் நிலைய போலீசருக்கு தகவல் தெரிவித்ததின்பேரில், அங்கு விரைந்து சென்ற போலீசார் விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்களை வரவழைத்து மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன மூதாட்டி காட்டுப் பகுதியில் உள்ள ஊரணி கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக கண்ணெடுக்கப்பட்டது தொடர்பாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை அதிகாரிகள் கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, நகைக்காக மூதாட்டி பேச்சியம்மாள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.