Seeman
Seeman pt desk
தமிழ்நாடு

“அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை எடுத்துச் செல்கிறார்கள்” - சீமான் குற்றச்சாட்டு

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சந்தோஷ்குமாரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

Seeman election campaign

அப்போது பேசிய அவர்....

‘தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?’

“தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க மாட்டோம் என கூறிய கர்நாடக காங்கிரஸ் தமிழ்நாட்டில் எப்படி ஓட்டு கேட்கிறது? தண்ணிய கொடுடா எனக் கேட்காத பாரதிய ஜனதா, தண்ணீரை பகிர்ந்து கொடுங்கள் என கூற முடியாத பாஜக, யார் வந்தாலும் நாங்கள் தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லும் காங்கிரசுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை என்றால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் வாங்க முடியாது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் பணங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

‘10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மோடி என்ன செய்தார்?’

10 ஆண்டு காலமாக மத்தியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்காக தமிழ்நாட்டிற்கு வருகின்ற பிரதமர் மோடி, ‘நான்தான் இந்த நாட்டின் பிரதமராக பத்தாண்டு இருந்திருக்கிறேன். இந்த பகுதிகளுக்கு இந்த இந்த திட்டங்கள் செய்திருக்கிறேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள்’ என பேசுவதற்கு வழியில்லை. அதைவிட்டுவிட்டு ‘எம்ஜிஆர் அவர்கள் எப்படிப்பட்ட தலைவர் என்று தெரியுமா? ஜெயலலிதா எப்படிப்பட்ட அம்மா தெரியுமா?’ என்கிறார். இவர்கள் யார் என எங்களுக்குத் தெரியும், நீங்கள் பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்? அதை சொல்லுங்கள்.

தமிழிசை - மோடி - அண்ணாமலை

‘கோவையில் அண்ணாமலை ஜெயிப்பதற்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தி உள்ளது’

திமுகவினர் ஏன் மோடியை எதிர்த்து பிரசாரம் செய்கிறார்கள்? அக்கட்சியில்தானே அப்பாவும் மகனும் மோடியை சதுரங்க விளையாட்டு, கேலோ இந்தியா விளையாட்டுக்கு அழைத்து வந்தனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற விளையாட்டுத் துறை அமைச்சர் சென்று பிரதமரை அழைத்துப் பார்த்ததில்லை. இவர்கள் ஏன் இப்போது அவரை எதிர்க்க வேண்டும்?

கோவையில் அண்ணாமலை ஜெயிப்பதற்காக திமுக டம்மி வேட்பாளரை நிறுத்தி உள்ளது. அதேபோன்று தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற பாஜகவினர் டம்மி வேட்பாளர் நிறுத்தி உள்ளது.

தற்போது தண்ணீர் இல்லை. தமிழ்நாட்டில் பள்ளிக் கூடங்கள் கூட சுடுகாடு போல் இருக்கும். ஆனால், சமாதிகள் மாளிகை போல் ஜொலிக்கும். இவை அனைத்தையும் பொதுமக்கள் ஒற்றை விரலால் மாற்றிப் போட முடியும். ஆகவே அனைவரும் ஒலிவாங்கி மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என்று பேசினார்.