தந்தை பெரியாரை இழிவுபடுத்தியதற்காக ஜனவரி 22-ம் தேதியன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு முற்றுகையிடப்படும் என 30க்கும் மேற்பட்ட பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகள் அறிவித்திருந்தன. இதையடுத்து சீமான் வீட்டுக்கு பாதுகாப்பாக நேற்று இரவு முதலே நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் குவியத் தொடங்கினர். இந்நிலையில் இன்று காலை அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இபப்டியாக கடும் பாதுகாப்புக்கு இடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், மீண்டும் பெரியார் குறித்தான மேலும் பல அவதூறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். இது அரசியல் களத்தை மேலும் சலசலப்படைய செய்துள்ளது. சீமான் பேசியதாவது:
“பெரியாரா பிரபாகரனா என்று மோதுவதாகி விட்டது. இனி மோத வேண்டியதுதான். நான் இதேபோன்று ஊடகத்தில் அல்லது பொதுக்கூட்டத்தில் பேசுகிறேன். அதற்கு நீங்கள் பதில் கூறினாலும் சரி. அவதூறை தவிர வேறு எதாவது கூறப்பட்டு இருக்கிறதா...?
நாம் தமிழர் கட்சி என்னுடைய தாத்தாவின் கட்சி, தமிழ் தந்தை உடையது, ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை உடையது. நாம் தமிழர் என்று பெயர் வைப்பதற்கு யாரிடத்தில் சென்று நான் அனுமதி வாங்கவேண்டும்? சோவுக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதையெல்லாம் அடிப்படை அறிவுடன்தான் பேசுகிறார்களா? எத்தனை நாளுக்கு இந்த கட்டுக் கதையை விடுவார்கள்? நான் எதிர்த்து உங்களை பேச மாட்டேன் என்கிற ஒரே தைரியத்தில்தானே இத்தனையையும் பேசுகிறீர்கள்..
நாம் தமிழர் என்ற கட்சியின் பெயரை சோவும் குருமூர்த்தியும் வாங்கி கொடுத்தார்களா? ஏதாவது ஆதாரம் வைத்திருக்கிறீர்களா என்ன? பெரியார் உங்களுக்கு தேவை என்றால், பூஜை அறையில் வைத்து பூஜை செய்யுங்கள்.
அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர்... ‘தமிழ் முட்டாள்களின் பாஷை, தமிழ் சனியன், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் சனியனை விட்டு ஒழியுங்கள். அப்படி தமிழில் என்ன இருக்கிறது? தமிழ் உங்களை படிக்க வைத்ததா?’ என்றெல்லாம் பேசியவர் பெரியார்.
என் மொழியை தாழ்த்திப் பேசுவதற்கு நீங்கள் (பெரியார்) யார்? உங்களுக்கு அதற்கான உரிமையை கொடுத்தது யார்? என் நிலத்தில் வாழும் அனைவருடைய மொழியும் உயர்ந்தது என்றால், என் மொழி தாழ்ந்ததா? அடிப்படையில் என் மொழி முட்டாள்களின் மொழி என்றால்.. உங்களை முட்டாள்களின் தலைவன் என்றுதானே சொல்ல வேண்டும். தமிழர் தலைவன் என்று புத்தகத்தை வெளியிட்டது யார்?
தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றால்... உங்களைக் காட்டுமிராண்டி என் தலைவன் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆனால் இவர்கள் தமிழர் தலைவன் என்று கூறுகிறார்கள்.
நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் அலறினால் எப்படி?..
பெரியார், ‘பெண்களை தாலி அடிமைப்படுத்துகிறது, தாலி அடிமையின் சின்னம் . அதனால் அறுத்து எரியுங்கள்’ என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்டு, பொது மேடையில் வைத்து திராவிட கழகம் தாலியை அறுத்தெரியும் பணியை செய்கிறது .
அதே பெரியார்.. ‘கர்ப்பப்பையை வெட்டி எறி, நீ பிள்ளை பெற்றெடுக்கும் இயந்திரம் அல்ல. அது உன்னை அடிமைப் படுத்துகிறது’ என்று கூறினார்தானே? ஆனால், மேடையில் வைத்து நீங்கள் ஏன் கர்ப்பப்பையை ஒரு இடத்திலும் அறுக்கவில்லை? குறிப்பாக.. அக்கா அருள்மொழியும், கனிமொழியும், அம்மையார் சுந்தரவல்லியும்.. நீங்கள் யாரும் கர்ப்பப்பையை அறுத்து எறியவில்லையே..? குழந்தை பெற்றெடுத்திருக்கிறீர்களே.. எப்படி? இதுதான் நீங்கள் பெரியாரை பின்பற்றுவதா?
பெரியார்தான் அறிஞர் அண்ணாவை படிக்க வைத்தாரா? எங்களைப் படிக்க வைத்தது காமராஜர். குடிக்க வைத்தது திராவிடம். பெரியார் எந்த மதத்திற்கு எதிரான குறியீடு? பெரியாரின் பரிணாம வளர்ச்சிதான் திமுக. பெரியாரின் பெருமைமிக்க பெண்ணியம் குறித்து கொஞ்சம் பேச சொல்லுங்கள். தள்ளாடிக்கொண்டு தளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது திராவிடம். பேரெழுச்சி பெற்றிருக்கிறது தமிழ் தேசிய அரசியல்.. மோதிக் கொண்டு இருக்காதீர்கள்!” என்று பேசியிருக்கிறார்.