நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா Pt web
தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது.. தலைவர்கள் கண்டனம்!!

தாராபுரம் நாதக வேட்பாளாரான கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டம் தெரிவித்துள்ளனர்.

Premkumar S

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா போட்டியிட்டார். தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் செல்லும் பாதையில் பிரச்சாரம் மேற்கொண்டது உள்ளிட்ட சம்பவங்கள் மூலம் அவர் கவனம் ஈர்த்தார் கார்த்திகா. இதுதொடர்பாக, அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச்சூழலில் தான், இன்று இந்த வழக்குகளின் அடிப்படையில், கோவையில் உள்ள கார்த்திகாவின் இல்லத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர், அவரையும் அவரது கணவரையும் கைது செய்து தாராபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், தாராபுரம் இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்ட கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார்த்திகா

இந்நிலையில் தான், அவரது கைதுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில், ”அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!” எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின், ”நாதக வேட்பாளர் கார்த்திகாவை தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை கொள்கைக்கு அப்பால் வரவேற்க வேண்டும். அத்தகையோரை கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக தவெக அரசு எதை சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திமுகவை கார்த்திகா விமர்சித்தபோது கொள்கை வழிநின்று தக்க பதிலளித்தோம். விமர்சித்தற்காக பெண் தலைவர்களை சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "நாதக நிர்வாகிகளை கைது செய்தது எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை. கொலையை கட்டுப்படுத்தாமல், போலீஸை வைத்து எதிர்க்கட்சியினரை கைது செய்வது அதிகார துஷ்பிரயோகம். அரசியல் விருப்பு வெறுப்புக்காக காவல் துறையை பயன்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனும், த.வெ.க.வினர் மீதான போதைப்பொருள் கடத்தல் புகார்களைத் திசைதிருப்பவும் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அரசியலில் விமர்சனங்களும், ஜனநாயக ரீதியிலான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை என்றும், அதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்ணைக் கைது செய்வது பாசிச நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவின் நகலாகச் செயல்படாமல், கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் விஜய் மேற்கொள்ள வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.