Notice issued to the Guziliyamparai Taluk Tahsildar  TN Govt
தமிழ்நாடு

கம்யூனிஸ்டுகளை குறிவைத்து சுற்றறிக்கை : அதிரடி முடிவெடுத்த அரசு.. வட்டாட்சியருக்கு 15 நாள் கெடு!

கம்யூனிஸ்டுகளை குறிவைத்து சுற்றறிக்கை அனுப்பிய குஜிலியம்பாறை தாலுகா வட்டாட்சியருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Praveen Joshva L

திண்டுக்கல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி விவரங்களை சேகரிக்க கிராம உதவியாளர்களுக்கு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை அனுப்பியதால், சிபிஎம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அரசு சுற்றறிக்கையை ரத்து செய்து, அய்யாசாமியை பணியிட மாற்றம் செய்து, 15 நாளில் விளக்கம் கேட்டு நடவடிக்கை எச்சரிக்கை அனுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை தாலுகா வட்டாட்சியராக அய்யாசாமி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜிலியம்பாறை வட்டத்திற்குட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதில், தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வட்டாட்சியரிடம் வழங்குமாறும், தவறும் கிராம உதவியாளர்கள் மீது தக்க நடவடிக்கை பாயும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து திண்டுக்கல் சிபிஎம் எம்.பி, சச்சிதானந்தம், இந்தியாவில் ஆங்கிலேயர் காலகட்டத்தில் கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்தில்கூட இதுபோன்ற உத்தரவுகளை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை என்றும், ஒரு தேசிய அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் விவரங்களைச் சேகரிக்கச் சொல்லி அறிக்கை அனுப்பும் அளவிற்கு தற்போது குஜிலியம்பாறை வட்டாட்சியருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா? என்றும் விமர்சித்திருந்தார்.

மேலும், மணல் கடத்துவோர், ஆக்கிரமிப்பாளர்கள், குற்றவாளிகள் உள்ளிட்டோரின் விவரங்களைச் சேகரிப்பதைவிட, கட்சியினரின் விவரங்களைச் சேகரிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், வட்டாட்சியர் அய்யாசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குஜிலியம்பாறை வட்டாட்சியரால் அனுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப்பெறுவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேலும் குறிப்பிட்ட வட்டாட்சியர் அய்யாசாமி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் சண்முகமும், இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு கம்யூனிஸ்டுகள் முக்கியமா ? அதிகாரிகள் முக்கியமா என கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்கவேண்டும் என குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியர் அய்யாசாமிக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், நன்னடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளதால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், இதற்கு எதிரான விளக்கம் அளிக்கவேண்டும், இந்த ஆணை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விளக்கம் அளிக்கவில்லை என்றால் தகுதியின் அடிப்படையில் முடிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.