\
Why Karunanidhi choose the yellow shawl? Explore the story behind it
KarunanidhiREUTERS

விவாதமான கருணாநிதியின் மஞ்சள் சால்வை! மஞ்சள் நிறத்தைத் தேர்வு செய்தது ஏன்? - பின்னணி என்ன?

கலைஞர் கருணாநிதியின் அடையாளமாகவே மாறிப்போன மஞ்சள் நிற சால்வையை அவர் அணிந்ததற்கான காரணம் என்ன?
Published on

ஆகஸ்ட் 4-ம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீதான விவாதங்களும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதலமைச்சர் விஜய் சில நாட்களுக்கு முன்பு, “ஊழல் தொடர்பான கோப்புகள் என் டேபிள் மீது உள்ளது. உரிய காலம் வரும்போது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாக இருந்தால், ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்? “ஜோசியர் கூறினால் தான் திறப்பாரா என்று பேசியிருந்தார்.

PT
karunanidhikarunanidhi

இதற்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “அந்தக் கோப்புகள் உரிய காலம் வரும்போது நடவடிக்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும். ஜோசியர் கூறி மஞ்சள் துண்டு அணிந்த கதைகளையெல்லாம் நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்று கூறியிருந்தார். அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டது மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியைத்தான் என்று விவாதம் எழுந்தது. உண்மையில், கலைஞர் கருணாநிதியின் அடையாளமாகவே மாறிப்போன மஞ்சள் நிற சால்வையை அவர் அணிந்ததற்கான காரணம் என்ன? அமைச்சர் நிர்மல் குமார் கூறியது போன்று, ஜோதிடர் கூறியதன் பேரில்தான் அவர் மஞ்சள் சால்வை அணிய ஆரம்பித்தாரா என்று பலரும் இணையத்தில் தேடத் தொடங்கினர். இந்நிலையில், திமுகவினரும் கலைஞர் கருணாநிதி மஞ்சள் நிற சால்வை அணிந்ததற்கான காரணத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில், ‘கலைஞரின் கடிதங்கள்’ என்ற புத்தகத்தில் ஏற்கனவே தனது மஞ்சள் நிற சால்வை குறித்து விவாதங்கள் எழுந்தபோது, கலைஞர் கருணாநிதி தனது தொண்டர்களுக்கு அதுகுறித்து விளக்கமளித்து கடிதம் எழுதியதாகக் கூறப்படும் பக்கங்களைப் பதிவிட்டுள்ளனர். அந்தப் புத்தகத்தில், தனது வலது கன்னத்தில் மாம்பிஞ்சு அளவுக்கு ஒரு வீக்கம் ஏற்பட்டதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகியதால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை மேற்கொண்டதாகவும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, வலது கன்னத்தில் உமிழ்நீர் சுரப்பியுடன் இணைந்துள்ள மெல்லிய நரம்புக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால், அதன் காரணமாக உமிழ்நீர்த் தேக்கம் ஏற்பட்டு இந்த வீக்கம் ஏற்பட்டதாகவும் தொண்டைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும், அந்த அறுவை சிகிச்சையால் பேசுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலின்Pt web

பின்னர், வீக்கம் குறைந்து கொண்டு வந்த நிலையில், மருந்து மூலமே இதனை சரி செய்யலாம் தொடர்ந்து கழுத்துப் பகுதியைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால், “கதர் துண்டுக்குப் பதிலாக கம்பளி போன்ற சால்வையை அணிந்துகொள்ளுங்கள்” என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அதன்படி, சில நாட்கள் சால்வை அணிந்ததாகவும், தான் முதன்முறையாக அணிந்த சால்வை மஞ்சள் நிறத்தில் இருந்ததால், அது தனக்கு நன்றாக இருப்பதாக பலர் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து மஞ்சள் சால்வையே அணியும்படி பலரும் கேட்டுக்கொண்டதாகவும், அதனடிப்படையிலேயே தான் எப்போதும் மஞ்சள் சால்வை அணிந்து வந்ததாகவும் அந்தக் கடிதத்தில் கலைஞர் கருணாநிதி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் விவாதமான மஞ்சள் சால்வை குறித்த கருத்துகளால், மீண்டும் கருணாநிதியின் மஞ்சள் நிற சால்வை குறித்த விவாதம் அரசியல் களத்திலும், இணையத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

செய்தியார் - ராஜ்குமார்.ர

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com