ஆதவ் அர்ஜூனா Pt web
தமிழ்நாடு

”திமுக பெரிய கூட்டணி பிம்பத்தைக் காட்டுகிறது; அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை” - ஆதவ் அர்ஜூனா

அதிமுக நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் காணவில்லை என தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார்.

PT WEB

தமிழக வெற்றிக் கழகத்தின் சென்னை மாவட்ட தேர்தல் பிரச்சாரகுழு கூட்டம் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்டவர்கள் 2000 பேர் கலந்து கொண்டனர். தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், இணை செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் நேரத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

தேர்தல் பிரச்சாரகுழு கூட்டம்

தொடர்ந்து இக்கூட்டத்தில் தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, திமுக பாஜகவுடன் மறைமுகக் கூட்டணியில் இருப்பதாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், ’திமுகவின் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆனால், ஜனநாயகன் படத்திற்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், தவெக-வை பா.ஜ.க வின் பி டீம் என திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையாக பார்த்தால் திமுக தான் பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ”சென்னையில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. முதல்வர் உட்பட நான்கு அமைச்சர்கள் சென்னையில் இருந்தும் தடுக்க தவறியிருக்கின்றனர். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் சாலையில் நடக்க முடியாது. தமிழகத்தில் காவல்துறையினர் இதுவரை திமுக அல்லது அதிமுக காவல்துறையினராக தான் இருந்தார்கள். ஆனால், தவெக ஆட்சியில் மக்களுக்கான காவலர்களாக இருப்பார்கள்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆதவ் அர்ஜூனா

அதிமுக குறித்து பேசுகையில், ”நான்கு ஆண்டுகளாக அதிமுக காணவில்லை; அதிமுக தலைமை மீதே மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கக் கூடிய ஒரு கட்சி ஒரு கூட்டணி அமைத்தால் நமக்கு என்ன கவலை. அதேபோல, திமுகவும் பெரிய கூட்டணி இருக்கிறது என ஒரு பிம்பத்தை தான் காட்டுகின்றனர். எந்த காலத்திலும் திமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. எனவே, நாம், காமராஜர், எம்.ஜி.ஆர் போல் ஒரு ஆட்சியை உருவாக்கலாம். நிர்வாகிகள் இதை நினைத்து செயல்படுத்த வேண்டும். மே மாதம் விஜய் முதல்வராக இருப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார்.