தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களை எளிதாக அடையாளம் காணும் வகையில் உள்ள ”காலனி” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, ஊர்களுக்கோ அல்லது தெருக்களுக்கோ பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு சமீபத்தில் சட்டமியற்றியிருந்தது. மேலும், அரசு ஆவணங்களிலிருந்தும் காலனி என்ற சொல்லை நீக்கியிருந்தது.
இந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த உதயமரதிட்டு பகுதியில் உள்ள ’தன்வாசிகாலனி’ என்ற பெயர் ’உதயம்நகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதி தமிழர் பேரவை தலைவர் அதியமான் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், காலனி என்ற பெயரால் பிரச்னை வருகிறது என்பதை புரிந்து கொண்டு பொதுவான பெயர் வைக்க உதவிய திமுக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “தவெக விஜய்க்கு இதுவரை ஒரு கவுன்சிலர் கூட இல்லை. ஆனால், திமுகவை விமர்ச்சிக்கிறார். பனையூரை விட்டு அவர் வெளியே வந்தால் தான், களம் என்றால் என்ன என்று அவருக்குத் தெரியும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியிருப்பது கண்டிக்கத் தக்கது எனத் தெரிவித்தார்.