சாதிய பாகுபாடு முகநூல்
தமிழ்நாடு

சிறையில் சாதிய பாகுபாடு... உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் உள்ள சிறையில் சாதிய பாகுபாடு தொடர்பான பிரச்னைகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், இனி சிறைகளில் சாதிய பாகுபாடு காட்டக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

எவ்வளவுதான் அறிவியல் ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக பல மாற்றங்களை இந்த நாடு அடைந்து வந்தாலும், பல நூற்றாண்டுகளை நாம் கடந்து வந்தாலும் சமூகத்தில் ஏதோ ஒரு மூலையில் சாதிக்கொடுமைகள் என்னும் அழுக்கு போகாமல் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதனால், பாதிக்கப்படுவதும் குறிப்பிட்ட தரப்பினராகவே இருக்கிறார்கள்.

பல போராட்டங்கள், சட்டங்கள் என இதற்கெதிராக பல முன்னெடுப்புகள் நடந்த வண்ணம் இருக்கிறது. ஆனாலும், பள்ளி, கோவில், கல்லூரி என அனைத்திலும் தற்போதுவரை ஏதாவது ஒரு தோற்றத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த தீண்டாமை சிறை சென்றவர்களையும் விட்டுவைக்கவில்லை.

2020 ஆம் ஆண்டு சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்த பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார். இவ்வழக்கு 2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவே, அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வழக்கை விசாரிக்கிறது.

அதில், தமிழ்நாடு உட்பட 14 மாநிலங்களுக்கு சிறையில் சாதி பாகுபாடு காட்ட கூடாது என்று உள்துறை அமைச்சகம் மூலம் கடிதங்கள் அனுப்பப்படுகிறது . இந்தநிலையில், தற்போது தமிழ்நாடு அரசு சிறையில் சாதி பாகுபாடுகளை காட்டக்கூடாது என்று ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசு பிறப்பித்துள்ள ஆணையில், கைதியிடம் சிறை அதிகாரிகள் சாதி குறித்த விவரங்களை சேகரிக்க கூடாது என்றும், சாதி அடிப்படையில் கைதிகள் குறித்த பதிவேடுகள் எதையும் பின்பற்றக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சாதி ரீதியாக கைதிகளுக்கு பணிகளை ஒதுக்கக் கூடாது என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.