’ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுகவை பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை...’- பதிலடி கொடுத்த அதிமுக!
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக நேற்றைய தினம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினார்.
அதில், "அதிமுக பாஜகவுடன் சேர்ந்தவுடனேயே அது தவறு என நாங்கள் அறிக்கை கொடுத்துவிட்டோம். மக்களே அதிமுகவுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்கள். அப்படிப்பட்டவர்களை நாங்கள் ஏன் விமர்சிக்க வேண்டும்? அதிமுக ஆட்சியில் இல்லாத கட்சி , பல தேர்தல்களில் தோல்வி அடைந்த ஒரு கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்.” என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக பற்றி பேச, ஆதவ் அர்ஜுனாவிற்கு எள்ளளவும் தகுதி இல்லை என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், "திடீர்" அரசியல்வாதியாகி, பல கட்சி தாவுவதில் கைதேர்ந்த வித்தகரான ஆதவ் அர்ஜுனாவிற்கு @AIADMKOfficial பற்றி பேச எள்ளளவும் அருகதை இல்லை.
இன்று த.வெ.க.-வில் அமர்ந்துகொண்டு கருத்து கூறும் நீங்கள், நாளை எந்தக் கட்சியில் இருப்பீர்கள் என்று தெரியவில்லை. எனவே, உங்கள் கருத்துக்கு பதில் அவசியம் இல்லை! “ என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.