JCD prabhakar with MGR & vijay  web
தமிழ்நாடு

MGR-ஆல் போற்றப்பட்டவர் ஜேசிடி பிரபாகர்.. யார் இந்த புதிய சபாநாயகர்.?

எனக்கு பெண் பிள்ளை இருந்திருந்தால் பிரபாகருக்கு மணமுடித்து கொடுத்திருப்பேன் என்ற MGR-ன் அளப்பரிய பாசத்துக்குரியவர் தான் இந்த ஜே.சி.டி. பிரபாகர்.

PT WEB

அதிமுகவில் எம்.ஜி.ஆர் நம்பிக்கைக்குரிய இளைஞரணி செயலாளராக திகழ்ந்த ஜே.சி.டி. பிரபாகர், வில்லிவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் தொடர்ச்சியான தேர்தல் சவால்களை எதிர்கொண்டார். பின்னர் தவெகவில் சேர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது 50 ஆண்டு அரசியல் அனுபவத்தின் பலனாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர் ஜேசிடி பிரபாகர். எம்.ஜி ஆர் மீதான பற்றால் அரசியலுக்கு வந்த இவர், தமிழ்நாடு சட்டபேரவையின் சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவை தொடங்கியதும், அவருடனே இணைந்து செயல்பட்டார். அப்போது கட்சியில் முக்கியப் பதவியான 'மாநில எம்ஜிஆர் இளைஞரணி' செயலாளராக எம்.ஜி.ஆர்-ஆலே நியமிக்கப்பட்டார். ஜே.சி.டி. பிரபாகர் மீது எம்.ஜிஆருக்கு அளப்பரிய பாசம் இருந்தது அரசியல் வட்டாரத்தில் அனைவரும் அறிந்த ஒன்றே.

JCD Prabhakar with MGR

1980ம் ஆண்டு அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்ட போது, 'என்ன தவறு செய்தேன்' எனக் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர் பிரசாரம் சென்றார்.

அப்போது, சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரை, ஆதரித்து பிரசாரம் செய்ய வந்த எம்.ஜி.ஆர், எனக்கு மட்டும் இறைவன் குழந்தை பாக்கியம் தந்திருந்தால் அதுவும் பெண் பிள்ளை இருந்திருந்தால் எனது மகளை பிரபாகருக்கு மணமுடித்து கொடுத்திருப்பேன். அப்படிப்பட்ட பிரபாகருக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்' என மனமுறுக எம்.ஜி.ஆர் பேசியதையே இன்று நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தின்போது நினைவு கூர்ந்தார் சபாநாயகர் பிரபாகர்.

JCD Prabhakar with Jayalalithaa

மேலும் அந்த நேரத்தில், விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்ட போதும் சற்றும் தளராத, ஜேசிடி பிரபாகர் ஊன்று கோலுடன் வில்லிவாக்கம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்ற அவர். அதை தொடர்ந்து 1984-லிலும், எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு இரண்டாக பிரிந்த அதிமுகவில் ஜானகி அணியில் இருந்த அவர் 1989லிலும் அதே வில்லிவாக்க தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

தொடர் தோல்விகளுக்கு பிறகு 2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவும் இவருக்கு மீண்டும் அதே வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார். அந்தத் தேர்தலிலும் தோல்வியை சந்தித்தார். 2016ல் மு.க ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் நின்று, மீண்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அதிமுகவிலேயே தொடர்ந்தவருக்கு 2021ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வில்லிவாக்கத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் அவரால் வெற்றி பெறவில்லை.

JCD Prabhakar campaigning for TVK

இந்த நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் பிரபாகரின் மகன் முதலில் தவெகவில் இணைந்தார். அடுத்த சில தினங்களில் பிரபாகரும் தவெகவில் சேர, அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் அக்கட்சித் தலைவர் விஜய். தேர்தலில் வென்றதுடன் தமிழ்நாடு 17வது சட்டபேரவையின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். 50 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட ஜே.சி.டி. பிரபாகரை சபாநாயகராக கொண்டு தமிழ்நாடு சட்டமன்றம் நடைபெறவுள்ளது.