செய்தியாளர்: மணிகண்டன்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அதில் இருந்து உடைந்த நிலையிலான சுடுமண் உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லு, தங்கமணிகள் என இதுவரை 2750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சூது பவளமணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வட மாநிலங்களுடன் இருந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
இது குறித்து அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் கூறுகையில்... “3ம் கட்ட அகழாய்வில் தற்போது கிடைத்துள்ள சூது பவளமணி தயாரிக்க பயன்படும் மூலப்பொருள் ராஜஸ்தான் பகுதியில் மட்டுமே கிடைக்கிறது. இது இங்கிருந்து வட மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகள் உடனான வணிகத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது” என்று தெரிவித்தார்.