வங்ககடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே வெளுத்து வாங்கியது. தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் தற்போது 4 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் இன்று காலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதால் மீண்டும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.
இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர் மற்றும் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (02.11.2025) மற்றும் நாளை (03.11.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து தமிழகத்திலும் புதுவையிலும் நவம்பர் 8ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.