நெல்லை போலீஸ், அண்ணாமலை எக்ஸ் தளம்
தமிழ்நாடு

அய்யா வைகுண்டர் அவதார தின விழா | ’நெல்லையில் நடந்தது இதுதான்’ - குற்றச்சாட்டுக்கு காவல்துறை விளக்கம்

அய்யா வைகுண்டர் சமையல்கூடம் விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திருநெல்வேலி மாநகர காவல் துறை பதிலளித்துள்ளது

PT WEB

அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, நாடு முழுதும் உள்ள அவரது கோயில்களில் கோலாகலமாக விழாக்கள் கொண்டாடப்பட்டன.

இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அய்யா வைகுண்டபதிக்குள் காவல் துறையினர் முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”உலகெங்கும் உள்ள அய்யா வைகுண்டர் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அய்யா வைகுண்டரின் அவதார விழாவுக்கு, திமுக அரசு பல்வேறு கெடுபிடிகள் விதித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை அய்யா வைகுண்டபதிக்குள் நுழைந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதைத் தடுத்து, சமையல் பாத்திரங்களை எடுத்துச் சென்றிருக்கிறது காவல்துறை.

இதனால், அய்யா வைகுண்டரின் பக்தர்கள் மனம் புண்பட்டிருக்கிறார்கள். ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு. போலி மதச்சார்பின்மை பேசி, தமிழகத்தின் ஆன்மீக நம்பிக்கைகளை, இது போன்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளால் சிதைத்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறோம். அய்யா வைகுண்டரின் அவதார தினமான இன்று, பக்தர்கள் மனதைப் புண்படுத்தியதற்கு, முதலமைச்சர் மன்னிப்பு கேட்பதோடு, இந்த முறைகேடான நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்” எனப் பதிவிட்டிருந்தார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்டுக்கு திருநெல்வேலி மாநகர காவல் துறை பதிலளித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாநகர காவல் துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் வராத சொக்கலிங்கசாமி கோவில் தெருவில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கு உள்ள பிரச்சனை தொடர்பாக வருவாய் கோட்டாச்சியர் அவர்களின் தலைமையில் விசாரணை நடைபெற்று அதன் தொடர்ச்சியாக உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு கடந்த 21.02.2025 தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை இருதரப்பும் ஏற்று எழுத்துப்பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர்.

நெல்லை காவல் துறை நோட்டீஸ்

இந்நிலையில் இன்று 04.03.2025ஆம் தேதி உரிமையியல் பிரச்சனை உள்ள இடத்தில் நீதிமன்றத்தை அனுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உள்நுழைந்து அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர். இதற்கு எதிர்தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில் இதனை முறையாக திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் துறையினர் தடுத்து உரிய சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் நடவடிக்கை கண்ணியமாகவும், நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது என்ற தகவல் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தற்சமயம் இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் காவல்துறை அராஜகம் எனவும், அன்னதானம் நிறுத்தப்பட்டது போல தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துக்கொள்ளப் படுகிறது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.