செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா
நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 9 பேருடன் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று விட்டு காரில் ஊருக்குத் திரும்பியுள்ளனர். அதே போல் நெல்லை டக்கம்மாள்புரத்தைச் சேர்ந்த தனிஷ்லாஸ் என்பவர் தனக்குச் சொந்தமான காரில் குடும்ப உறுப்பினர்கள் 6 பேருடன் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் காரை ஓட்டிவந்த டிரைவர் மாரியப்பன் என்பவர் சற்று கண் அசந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டை இழந்து நடுவில் இருந்த தடுப்புச் சுவரின் மீது ஏறி எதிர் திசையில் வந்த தனிஷ்லாஸ் காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரு கார்களில் இருந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள், காரில் காயங்களுடன் இருந்தவர்களை மீட்ட நிலையில், இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் பரிதாபமாக காருக்குள்ளேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் நாகர்கோயில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் தனிஸ்லாஸ் அவரது மனைவி மார்க்ரெட் மேரி அவரது மகன் ஜோபட், ஜோபட் மனைவி அமுதா, இவர்களின் இரண்டு வயது மகன் ஜோகன் ஒரு மகள் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த மில்க் கிஸ் என்பவரும் உயிரிழந்தார். 8 எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.