Gold coins file
தமிழ்நாடு

நெல்லை | 2 கிலோ தங்க நாணயங்கள் மாயம் - தொழிலதிபர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை!

நெல்லையில் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் திருடு போனதாக தொழிலதிபர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகரைச் சேர்ந்தவர் ரஞ்சன் (42). தொழிலதிபரான இவர், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள 2 கிலோ தங்க நாணயங்கள் திருடு போனதாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

House

அந்த புகாரில், ”நான் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருகிறேன். எனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 2.220 கிலோ எடையுள்ள தங்க நாணயங்கள் திருடு போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். எனது வீட்டில் பணிபுரிந்த ஊழியர்கள் மீது சந்தேகம் இருக்கிறது எனவே உரிய விசாரணை நடத்தி நகையை மீட்டுத் தர வேண்டும்” என கூறியுள்ளார்.

இதையடுத்து ரஞ்சன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் வீட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஊழியர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.