youth with wound
youth with wound pt web
தமிழ்நாடு

சேலம்: ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. கத்தியுடன் இருந்த நீட் தேர்வு மாணவி - அதிர்ச்சி பின்னணி

PT WEB

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் சேலத்தில் தங்கி நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் பயின்று வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் பேலனஸ் இல்லாததால் அறிமுகம் இல்லாத ஒரு இளைஞரிடம் செல்போனை வாங்கி தனது தாயாருடன் பேசி ரீசார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளார். இதைக் கவனித்த அந்த இளைஞர் அந்த மாணவியிடம் நட்பு ரீதியாகப் பேச்சுக் கொடுத்துள்ளார். தனது பெயர் சக்திதாசன் எனவும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நான் ஒரு விலங்கியல் முதுகலை பட்டதாரி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து தானே அந்த மாணவிக்கு 300 ரூபாய்க்கு ரீசார்ஜ்-ம் செய்துள்ளார். சேலத்தில் நீட் பயிற்சி வகுப்பில் பயின்று வருவதாக மாணவி கூறியதையடுத்து நீட் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளுமாறு தனது செல்போன் எண்ணைக் கொடுத்துள்ளார். பின்னர் அந்த மாணவியின் செல்போன் நம்பரையும் வாங்கி சென்றுள்ளார் சக்திதாசன்.

இதனைத்தொடர்ந்து பழகிய ஒரு சில நாட்களிலேயே அடிக்கடி பணம் கொடுத்து உதவி வந்ததாகத் தெரிகிறது. பின்னர் கடந்த சனிக்கிழமை சேலம் சென்ற அந்த மாணவி சக்தி தாசனைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் சக்திதாசன் அறையில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் இருந்த அறையிலிருந்து பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள் ஓடிச் சென்று பார்த்த போது சக்திதாசன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அழகாபுரம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் நீட் தேர்வு தொடர்பாகச் சந்தேகம் கேட்கச் சென்ற மாணவிக்கு சக்திதாசன் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவி கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன சக்திதாசன் அங்கிருந்த கத்தியை எடுத்து மாணவியின் கையில் கிழித்துள்ளார். இதனைச் சுதாரித்துக் கொண்ட மாணவி அந்த கத்தியைப் பிடுங்கி சக்திதாசனை வயிற்றில் குத்தியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீட் தேர்வு மாணவி

பின்னர் இருவரிடமும் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை மாணவி கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.