டிடிவி தினகரன் pt web
தமிழ்நாடு

என்.டி.ஏ கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அமமுகவுக்கு 12 தொகுதிகள்?

என்.டி.ஏ கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், கூட்டணிப் பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு என அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இத்தேர்தல், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவைகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தனது கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டை ஓரளவுக்கு இறுதி செய்துவிட்டது. திமுக, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தொடங்குவதற்கு முன் தனது கூட்டணியை உறுதி செய்த அதிமுக, தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் பொறுமைக்காத்து வந்தது. இதற்கு, தவெக-வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சி செய்து வந்ததே காரணம் எனக் கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் தவெக அந்த அழைப்பை நிராகரித்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் தான், தற்போது கூட்டணிப் பேச்சு வார்த்தையை அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி தொடங்கியிருக்கிறது.

டிடிவி தினகரன் - அமித் ஷா

நேற்று முன்தினம் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னை திரும்பும் போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பழனிசாமி இன்னும் 4 நாட்களில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு என்பது 234 தொகுதிகளிலும் இருக்கிறது, யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து பேசி முடிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தான், அமித் ஷா-வின் அழைப்பின் பேரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று டெல்லி சென்றனர். தொடர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் டிடிவி தினகரன், பியூஷ் கோயலுடன் அமித் ஷா-வைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, அன்புமணி ராமதாஸும் அமித் ஷாவுடன் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், இன்று பியூஷ் கோயலுடன் இருவரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.