வில்லிவாக்கம் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், திமுக கோட்டை உடையும் என நம்பிக்கை தெரிவித்தார். தவெகவினரை யாரும் மிரட்டினால் 2000 பேர் வருவார்கள் என உறுதியளித்தார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிற்பார்கள், 170-180 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை வில்லிவாக்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கட்சியின் இணை பொது செயலாளர் சிடி ஆர் நிர்மல் குமார், துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், ஆட்சிக்கு வந்தால் ஐந்தாயிரம் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஆட்சிகள் வந்தால் தானே இது எல்லாம் அவர்களால் கொடுக்க முடியும். சென்னை திமுக கோட்டை என கூறி வருகின்றனர் ஆனால் இன்னும் 50, 60 நாட்களில் அந்த எண்ணம் உடைந்து போகும்.
இவ்வளவு நாள் உழைத்தது முக்கியமல்ல தலைவர் யாரை வேட்பாளராக நிற்க வைக்கிறாரோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும், அதுதான் முக்கியம்.
234 தொகுதியிலும் தமிழக வெற்றி வெற்றிக் கழக வேட்பாளர்கள் நிற்பார்கள், அதில் 170லிருந்து 180 சட்டமன்ற தொகுதிகள் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல உங்களை யாராவது மிரட்டினாலோ, உங்கள் மீது யாராவது கை வைத்தாலோ அடுத்த நிமிடமே நம்முடைய கழகத்தினர் 2000 பேர் அங்கு வருவார்கள், எனவே நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என நிர்வாகிகள் மத்தியில் கூறினார்.