'ஆதாரம் கிடைத்தது'| சென்னையை தாய்மண்ணாக கருதும் 'கயல்' ஆமை.. 3 முறை நிகழ்ந்த அதிசயம்!
தமிழகக் கடற்கரையில் முட்டையிட்டுச் சென்ற ஆலிவ் ரிட்லி ஆமைகளைச் செயற்கைக்கோள் கருவி மூலம் கண்காணித்ததில், அவை தங்களின் முந்தைய இருப்பிடத்திற்கே மீண்டும் வரும் 'தாய்மண் பற்று' கொண்டவை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் கடற்கரையில் விடுவிக்கப்பட்ட 'கயல்' என்ற ஆமை, இந்த ஒரே பருவத்தில் மட்டும் மூன்று முறை சென்னை கடற்கரைக்கே திரும்பி வந்து முட்டையிட்டுள்ளது. மொத்தம் 389 முட்டைகளை இது இட்டுள்ளது. தெற்கு நோக்கிப் பயணித்த பிறகும், மீண்டும் முட்டையிடச் சென்னையையே இது தேர்ந்தெடுத்துள்ளது.
இதேபோல் 'மேகலை' என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஆமை, இரண்டு முறை மீண்டும் வந்து 211 முட்டைகளை இட்டுள்ளது.
கண்காணிக்கும் தமிழக அரசு..
ஆமை முட்டைகளைப் பாதுகாப்பதற்காகத் தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.10 கடலோர மாவட்டங்களில் மொத்தம் 49 ஆமை முட்டை பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1,150 கூடுகள் கண்டறியப்பட்டு, 1,35,304 முட்டைகள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதுவரை 477 ஆமைக் குஞ்சுகள் பாதுகாப்பாகக் கடலுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடலோரப் பகுதிகளில் ஆமைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தடுக்க மாநில அளவிலான ஆமை பாதுகாப்புப் படை 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக மாநிலம் முழுவதும் இதுவரை 668 ஆமைகளின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதனைத் தடுக்கவும், ஆமைகளைப் பாதுகாக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

