மனோகரன் (55) - அனிதா (48)
மனோகரன் (55) - அனிதா (48)  pt desk
தமிழ்நாடு

நாமக்கல்: மனைவியை கொலை செய்து விட்டு கணவரும் விபரீத முடிவு - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

webteam

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள கொங்கு நகரில் வசித்து வந்தவர்கள் மனோகரன் (55) - அனிதா (48) தம்பதியர். இவர்களுக்கு பொறியியல் பட்டம் படித்த ராகுல் (25) என்ற மகன் உள்ளார். மனோகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதையடுத்து இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மீண்டும் ஓமன் செல்ல இருந்ததாக தெரிகிறது.

நாமக்கல்லில் மனோகரன் (55) - அனிதா (48) வசித்த கொங்கு நகர் பகுதி

இந்த நிலையில் இன்று காலை தனது தந்தை மனோகரனை அனுப்பி வைக்க மகன் ராகுல் அவர்களது மற்றொரு வீட்டில் இருந்து கொங்கு நகர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குளியல் அறையில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே ராகுல் அங்கே சென்று பார்த்துள்ளார். அப்போது மனோகரன் தனது மனைவி அனிதாவை கொலை செய்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராகுல் சத்தமிட்டுள்ளார். இதையடுத்து ராகுலையும் மனோகரன் துரத்தியுள்ளார்.

அங்கிருந்து தப்பித்து சென்ற ராகுல், நாமக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து மனோகரின் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் படுக்கை அறை கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மனோகரனும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மனோகரன் (55) - அனிதா (48) வீடு

இதைத் தொடர்ந்து 2 சடலங்களையும் கைப்பற்றிய நாமக்கல் காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஓமன் நாட்டில் பணிபுரியும் மனோகரன், பாதி சம்பளத்தை மட்டுமே மனைவி, மகனுக்கு அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து கணவரிடம் அனிதா கேட்டதை அடுத்து இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அனிதாவை கொலை செய்துவிட்டு இன்று மதியம் விமான மூலம் ஓமன் தப்பிச் செல்ல மனோகரன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகவே அவர் தனது மனைவியை கொலை செய்ததும், அதில் மாட்டிக்கொண்டதால் தானும் தற்கொலை செய்திருப்பதாகவும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.