செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் அடுத்த வீசாணம் கடகால் புதூரைச் சேர்ந்தவர் அருண்குமார் (32). இவர், சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காயத்ரி ஆகிய இவரும் சென்னையில் தங்கி ஜெர்மன் மொழியை கற்று வருகின்றனர். இந்நிலையில், இவர்களது மகன் சாய்கிரிஷ் (2), நாமக்கல் இ.பி.காலனியில் உள்ள பாட்டி சாந்தி (49) வீட்டில் இருந்து வந்தான்.
இதற்கிடையே, நேற்று அருண்குமார், காயத்ரி ஆகிய இருவரும் நேற்று மாலை நாமக்கல்லில் உள்ள மாமியார் சாந்தி வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, தரையில் படுத்திருந்த குழந்தை சாய்கிரிஷ் மீது பாட்டி சாந்தி குப்புறக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் உடனடியாக, அவர்களை இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் சாய்கிரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், பாட்டி சாந்தியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாமக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ஒரே சமயத்தில் பாட்டி, பேரன் இறந்துள்ள சம்பவம், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.