லாரி மோதிய விபத்து – தந்தை மகள் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

நாமக்கல் | இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்து – தந்தை மகள் உயிரிழப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் கோயிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய தந்தை மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: எம்.துரைசாமி

திருச்சி மாவட்டம், காட்டுபுத்தூர் அருகே கிடாரத்தைச் சேர்ந்தவர் லாரி உரிமையாளர் சிவசுப்ரமணியன் (51). இவரது மகள் ஸ்ரீநிதி (19), கோவை தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சிவசுப்ரமணியன் தனது மகள் மற்றும் மகனுடன் கடந்த 2-ம் தேதி பழனி முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, இரவு கரூருக்கு திரும்பியுள்ளார்.

சாலை விபத்து

பின் அங்கிருந்து, இருசக்கர வாகனத்தில் மூவரும் ஊருக்குத் திரும்பினர். அப்போது மோகனூர் உழவர் சந்தை அருகில் வந்தபோது, அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதில், தந்தை சிவசுப்ரமணியன், மகள் ஸ்ரீநிதி ஆகிய இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மகன் ஸ்ரீகார்த்திகேயன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதும் பதைபதைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, மோகனூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.