தங்கச் செயினை போலீசாரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர் pt desk
தமிழ்நாடு

நாமக்கல் | சாலையில் கிடந்த 5 பவுன் தங்கச் செயினை போலீசாரிடம் ஒப்படைத்த பெண் தூய்மைப் பணியாளர்

ராசிபுரம் அருகே சாலையில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர். தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி ராசிபுரம் டிஎஸ்பி ஊக்கத் தொகை வழங்கினார்.

PT WEB

செய்தியாளர்: எம்.துரைசாமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவரது உறவினரான சசிகலா என்பவரிடம் தனக்குச் சொந்தமான 5 பவுன் தங்க நகையை வழங்கியுள்ளார். அதை பெற்றுக் கொண்ட சசிகலா, பையில் எடுத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்குச் சென்று பார்த்த போது நகையை தவறவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சசிகலா, சங்கீதா ஆகிய இருவரும் வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சுகவனம் விசாரணை மேற்கொண்டு வந்ததார். இந்நிலையில், தூய்மைப் பணியாளர் ராதாமணி என்பவர் சாலையில் பையுடன் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதையடுத்து மீட்கப்பட்ட தங்க நகையை ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் நகையை தவறவிட்ட சசிகலா, சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து நேர்மையாக செயல்பட்ட தூய்மைப் பணியாளர் ராதாமணியை பாராட்டி அவருக்கு ஊக்கத் தொகை வழங்கினார். மேலும் காவலர் சந்திரசேகருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.