நாகை | வெகுவிமர்சையாக நடைபெற்ற கோடியக்காடு அவுலியாக்கனி தர்கா சந்தனக்கூடு பெருவிழா
செய்தியாளர்: சி.பக்கிரிதாஸ்
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்காடு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான மகான் அவுலியாக்கனி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் சந்தனம் பூசும் நிகழ்ச்சியை கோடியக்கரை மற்றும் கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விழாவையொட்டி சந்தனக்கூடு ஊர்வலத்தை தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் பாக்கர்அலி துவா ஓதி தொடங்கி வைத்தார். கோடியக்கரை மூகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலம் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புறப்பட்டு கோடியக்காடு அவுலியக்கனி தர்காவை அடைந்தது.
இதையடுத்து கோடியக்கரை மற்றும் கோடியக்காடு கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வந்த சந்தனக் கூட்டிற்கு இந்துக்களும் முஸ்லீம்களும் சமய வேறுபாடின்றி வழிபட்டனர். அவுலியாக்கனி தர்காவில் அதிகாலையில் மகானின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்;லாமியர்கள் கலந்து கொண்டனர்.