நயினார் நாகேந்திரன், த்ரிஷா Pt web
தமிழ்நாடு

நடிகை குறித்த சர்ச்சை பேச்சு| ”தவறி வந்த ஒரு வார்த்தை..” வருத்தம் தெரிவித்த நயினார்!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகை திரிஷாவை குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார். திரிஷா, தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். நயினார், தனது பேச்சில் தவறி வந்த வார்த்தைக்கு வருந்துவதாகவும், அரசியல் வாழ்க்கையில் தனிநபர் விமர்சனத்தை அனுமதிக்கமாட்டேன் எனவும் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. ஒவ்வொரு கட்சியை சேர்ந்த தலைவர்களும், மற்ற கட்சியையும், கட்சித் தலைவர்களையும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் தலைமையில் புதியதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அதற்காக தீவிரமாக செயல்பட்டு வரும் தவெக, பல கட்சிக்கூட்டங்களை நடத்திவருகிறது.

விஜய், நயினார் நாகேந்திரன்

இந்தசூழலில் சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியிருந்த தவெக தலைவர் விஜய் எதிர்கட்சித் தலைவர்களை விமர்சித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சுக்கு பதிலளித்திருந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டை விட்டும், திரிஷாவை விட்டும் வெளியே வரட்டும் என கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.

நயினார் நாகேந்திரனின் இத்தகைய சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இன்று நடிகை திரிஷாவும் அறிக்கை வெளியிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகந்திரனுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்..

நடிகைதிரிஷா வெளியிட்டிருந்த அறிக்கையில், ’மாநில அரசியலில் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இருந்து இப்படியான அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை விவாதப் பொருளாக்க வேண்டாம்’ எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தொடர்ந்து, ’எந்த அரசியல் கட்சிகளுடனும் தனக்கு தொடர்பில்லை எனவும், அரசியல் நிலைப்பாட்டில் நடுநிலையுடன் இருக்கவே விரும்புகிறேன்’ எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தசூழலில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நயினார் நாகேந்திரன் அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கும் அவர், “என்னுடைய அரசியல் வாழ்க்கையை பொறுத்தமட்டிலும், எந்தவொரு தனிநபர் குறித்த விமர்சனத்தையும் நான் அனுமதித்ததில்லை, நானும் பேசியதில்லை. அன்றைக்கு நான் பேசியது தவறி வந்த ஒரு வார்த்தை, அதற்கு எங்க்ளுடைய அகில இந்திய தலைவி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும் என்னிடம் பேசியிருந்தனர். உண்மையில் இதுகுறித்து யாரேனும் வருத்தம் அடைவார்கள் ஆனால் என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.