Nagercoil Railway Station Murder: 54-Year-Old Woman Sexually Assaulted and Killed Inside Train Coach X
தமிழ்நாடு

ரயில் பெட்டிக்குள் பெண் படுகொலை! ரயில் நிலைய பாதுகாப்பு எங்கே? மகளிர் ஆணையம் கேள்வி!

நாகர்கோவிலில் ரயில் பெட்டிக்குள் 54 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக டிஜிபிக்கு 7 நாள் கெடு விதித்துள்ளது தேசிய மகளிர் ஆணையம்! குற்றவாளி சிக்கியது எப்படி? அதிர்ச்சி பின்னணியைப் பார்க்கலாம்!

PT WEB

செய்தியாளர்: கோகுல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பயன்பாடின்றி நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டிக்குள், 54 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க தமிழக டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவளித்துள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு நவம்பர் 11ஆம் தேதி வந்த பயணிகள் ரயிலில் ஹேண்ட் பிரேக் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பராமரிப்புப் பணிக்காக அந்த ரயில் நாகர்கோவில் ரயில்வே யார்டில் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்ததும், மற்றொரு ரயிலில் இணைப்பதற்காகப் பெட்டிகளைச் சுத்தம் செய்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. உள்ளே சென்று பார்த்த ஊழியர்கள், இருக்கைக்கு அடியில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வந்த நாகர்கோவில் ரயில்வே போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர். முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் அழுகியிருந்ததால், அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

Nagercoil Train Coach Murder: Accused Arrested

இந்தநிலையில் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.  முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில், அவரது இடுப்பு மற்றும் விலா எலும்புகள் முறிந்திருப்பதும் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே, குற்றவாளியைக் கண்டறிய நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், 5ஆவது நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் பெட்டியிலிருந்து வெள்ளை நிற ஆடை அணிந்த ஒருவர் இறங்கிச் செல்வது பதிவாகியிருந்தது. 

இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகராமன்புதூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரைக் கைது செய்தனர். விசாரணையைத் தொடங்கிய ஆறு மணி நேரத்திற்குள் சந்தேக நபர் சிக்கியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Nagercoil Train Coach Murder: Accused Arrested

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாக ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்துவந்த ஐயப்பன், சம்பவத்தன்று யார்டு பகுதிக்கு வந்த 50 வயது மதிப்புமிக்க பெண்ணை வழிமறித்து, பலவந்தமாக இழுத்துச் சென்று ரயில் பெட்டிக்குள் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, இருக்கைக்கு அடியில் உடலை வைத்துவிட்டுத் தப்பிச் சென்றதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. நவம்பர் 21ஆம் தேதி தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழக டிஜிபிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், வழக்கை முழுமையாகவும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும் விசாரிக்க வேண்டும் என்றும், ரயில் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ரயில் நிலையங்களில் காலியாக நிறுத்தப்படும் பெட்டிகளைக் கண்காணித்தல், இரவு நேர ரோந்து, ரயில்வே காவல்துறை (GRP), ரயில்வே பாதுகாப்புப் படை (RPF), ரயில்வே அதிகாரிகள் இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை (ATR) ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வளாகங்களில் பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது என்றும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.