விஜய், சீமான் pt web
தமிழ்நாடு

“குறுக்கே விழாதீர்கள்.. விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” - தவெகவிற்கு நாதக பதில்!

விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பைப் ‘பணக்கொழுப்பு’ என்று குறிப்பிட்ட நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தவெக கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், நாம் தமிழர் தரப்பில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கேஷ்வர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பிரம்மதேசம் பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜேந்திர சோழன் பிறந்த நாள் பெருவிழா கூட்டத்தில் அவதூறாக பேசியதாக சீமான் மீது வழக்கு தொடரபட்டது. இவ்வழக்கு தொடர்பாக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராகினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “தமிழகத்தில் எத்தனை ஏரி குளம் எத்தனை மக்கள் எவ்வளவு வாக்கு சதவீதம் என எதுவுமே தெரியாத பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுத்து என்ன செய்து விடப் போகிறார். மேலும், அவரை அழைப்பவர்களுக்கு பண கொழுப்பு தான் காரணமாக உள்ளது” எனக் கடுமையாக சாடினார்.

சம்பத்குமார், சீமான்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “சமகால சமூகச் சூழலில் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூக வடிவமைப்பாளர்களை நியமிப்பதன் அவசியத்தை புரிந்துகொள்ளாமல் பணக் கொழுப்பு என்று பகிரங்கமாக அறிவித்துள்ள அண்ணன் சீமானுக்கு நடைமுறை அரசியல் யதார்த்தம் புரியவில்லை என்று தான் அர்த்தமாகிறது” என காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தவெகவிற்கு பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை. அதனையே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்கள் வலியுறுத்தினார். அந்த நடவடிக்கைகளை, ‘பணக்கொழுப்பு’ என மொத்தமாகத்தான் வர்ணித்தார். அப்படி பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு தவெக எதற்குக் குறுக்கே வந்துவிழுகிறது?

தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட! தாங்கள் நம்புகிற அரசியல் வெல்ல வேண்டுமென எண்ணுகிற பொதுமக்கள், தாங்களே விரும்பி அளிக்கிற நன்கொடைதான் திரள்நிதி! அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை தவெகவின் தலைவர் சகோதரர் விஜய் அவர்களுக்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம்.

தவெகவுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல!” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தவிவகாரம் தொடர்பாக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் நாதகவின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் இருவரும் புதிய தலைமுறைக்கு பேசியதன் முழுவிவரம் இந்த காணொளியில் பார்க்கவும்..