செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை புறநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் இரண்டாமாண்டு பிசிஏ படித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 28ம் தேதி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி, சக கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் விடிய விடிய மது அருந்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைவரும் மது போதையில் தூங்கியுள்ளனர். ஆனால், மாலை 4.30 மணி ஆகியும் அந்த மாணவி மட்டும் எழுப்பியும் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தோழிகள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாடித்துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற கேளம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி இறப்பிற்கு மது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.