விஜய் - ஸ்டாலின் Pt web
தமிழ்நாடு

"அப்பாவைக் காணோமா; என்னை எங்கும் தேடாதீர்கள்.." - முதல்வர் பேச்சுக்கு மு.க. ஸ்டாலின் பதிலடி!

தமிழ்நாட்டில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன; பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சர் என்ன சொன்னார்? எங்க அப்பாவைக் காணோம் என கேட்கிறார்; அப்பாவை அங்கு தேடாதீர்கள்; அவர் மக்கள் மனதில் பதிந்திருக்கிறார் என முதல்வரின் பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி.

Premkumar S

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், ஜூன் 19-ம் சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையின் கடைசி நாளான நேற்றைய முன்தினம் (ஜூன் 23) முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது, திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார்

முதல்வர் விஜய்

குறிப்பாக, முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில், 'உங்க அப்பா இங்கேதான் இருப்பாருனு சொன்னாங்க. அதான் தேடிக்கிட்டு இருக்கேன். எங்க, உங்க அப்பாவையே காணோம்..’” என்றவர், தொடர்ந்து “எங்களுக்கும் நக்கலாக, நையாண்டியாக சம்பமிந்தமில்லாத குட்டிக்கதை எல்லாம் எங்களுக்கும் பேசத் தெரியும் எனத் தெரிவித்தார். இந்த கருத்துக்கு சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த எதிக்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் விவகாரத்து தொடர்பாக சர்ச்சைக்குரிய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தசூழலில் தான், முதல்வரின் பேச்சு குறித்தும், எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனம் குறித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். எனினும், இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவிக்காமலேயே இருந்து வந்தார். இந்நிலையில், இன்று திருவாரூரில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், முதல்வர் விஜயின் அப்பாவை காணோம் விமர்சனம் குறித்து பேசியிருக்கிறார்.

ஸ்டாலின்

திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "தமிழ்நாட்டில் விவசாய பிரச்சனை மின்வெட்டு பிரச்சனை என நூறு பிரச்சனைகள் இருக்கும் பொழுது, கடந்த 2 நாட்களுக்குப் முன்பு முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 'அப்பாவைக் காணோம்' எனப் பேசியிருக்கிறார். நாட்டில் மின்வெட்டு, விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லை, விவசாயிகளோட கடன் தள்ளுபடிக்காக நடக்கும் போராட்டங்கள் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் இருக்கும்போது தமிழக முதல்வருக்கு இந்தப் பேச்சு தேவையா?

மேலும் தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக எடுத்துக் கூறிய பிறகும் அவர்களுக்கு புரியாமல் சட்டமன்ற மரபினை மீறி நடந்து கொள்கின்றனர்.. அப்பாவை காணோம் என்கிறார்கள். அப்பாவை எங்கும் தேடாதீர்கள்; தமிழக மக்கள் மனதில் நிரந்தரமாக இருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆயிரம் ரூபாய் புதுமை பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை நான் செய்துள்ளேன். மகளிர் உரிமைதொகை இருக்கும் வரை தமிழகத்தை நான் தான் ஆண்டு கொண்டிருக்கிறேன்" என முதல்வரின் விமர்சனத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.