தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதற்கான வேலைகள் தற்போதே வேகம் பிடித்து வருகின்றன. தவிர, இதர கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாமகவும் அதில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே முகுந்தன் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுமேடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். பின்னர், பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையிலான பிரச்னை சுமுக முடிவை எட்டியதாகக் கூறப்பட்டது. எனினும், சமீபத்தில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் எதிரொலித்தது.
இந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் உட்கட்சிப் பூசல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர், “பா.ம.க.வின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். மருத்துவர் ராமதாஸ் எங்கள் குலதெய்வம், அன்புமணி ராமதாஸ் எங்கள் எதிர்காலம். அன்புமணிதான் எங்கள் எதிர்காலம் என்பதை உணர்ந்து கட்சிப் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ள அவர், சொந்த காரணங்களுக்காக கட்சியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் மகள் காந்திமதியின் மகனான முகுந்தன் பரசுராமனுக்கு கட்சிப் பதவி வழங்கப்பட்டதே, தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.