அன்புமணியுடன் மோதலா? ராமதாஸ் கொடுத்த ரியாக்ஷன்!
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து இதற்கான வேலைகள் தற்போதே வேகம் பிடித்து வருகின்றன. தவிர, இதர கட்சிகளும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பாமகவும் அதில் சமீபகாலமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவருடைய மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே முகுந்தன் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே பொதுமேடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். பின்னர், பல கட்ட ஆலோசனைகள் நடைபெற்ற நிலையில், இருவருக்கும் இடையிலான பிரச்னை சுமுக முடிவை எட்டியதாகக் கூறப்பட்டது. எனினும், சமீபத்தில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு மாநாட்டில் எதிரொலித்தது.
இந்த நிலையில், பா.ம.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கவில்லை. அன்புமணி ராமதாஸும் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ”வரும் காலத்தில் அன்புமணி வருவார். கூட்டங்களில் கலந்துகொள்வார். கசப்பான செய்திகளை நான் எப்போதும் கூறுவதில்லை. அன்புமணியுடன் மனக்கசப்பு எதுவும் கிடையாது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, “இருவருக்கும் இடையே சுமுக முடிவு எட்டியுள்ளது. எந்த வகையிலும் நிலை குலையாது. நலிந்து போகாது. மேலும் வளமாக இருக்குமே தவிர, பாதிக்காது. இருவருடைய சந்திப்புக்குப் பிறகு அந்த வேகம், வீரியமாக மாறும்” எனத் தெரிவித்திருந்தார்.